உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்ம பதம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முனிவர் ☐ 31

114. தேர்ப்பாகன் குதிரைகளை அடக்கிப் பழக்கியிருப்பது போலே, இந்திரியங்களை அடக்கி, அகங்காரத்தை அகற்றி, ஆசையாகிய கறைகளில்லாதிருப்பவனைக் கண்டு தேவர்களும் பொறாமைப்படுவார்கள். (5)

115. பூமியைப் போன்ற பொறுமையுடனும், வீட்டு நிலை போன்ற உறுதியுடனும், சேறில்லாமல் தெளிந்த நீர் நிலை போன்ற தூய்மையுடையவனுக்குப் பிறப்புமில்லை, இறப்புமில்லை. (6)

116. உண்மையான ஞானத்தின் மூலம் விடுதலைபெற்றவனுடைய மனம் சாந்தியாயிருக்கும்; சொல் சாந்தியாயிருக்கும்; செயலும் சாந்தியாயிருக்கும். (7)

117. இன்ப துன்பங்களில் அலட்சிய முடையவனாயும் செயல்கள் ஒடுங்கிய பிறவா நிலையாகிய நிருவாண நிலையை அறிந்தவனாயும், பந்தங்கள் அனைத்தையும் அறுத்துக்கொண்டவனாயும்: (நன்மை தீமைகளுக்குரிய) எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் முடிவு கட்டியவனாயும், ஆசைகள் யாவையும் அகற்றியவனாயுமுள்ள ஒருவனே உத்தம புருஷன். (8)

118. அருகத்துக்கள் (முனிவர்கள்) எங்கே வசிக்கிறார்களோ, அது நாடாயினும் காடாயினும், பள்ளமாயினும் மேட்டு நிலமாயினும், அதுவே இரமணீயமான இடம். (9)

119. ஆரண்யங்கள் இரணீயமானவை; ஜனங்கள் எங்கே இன்புறுவதில்லையோ அங்கே விரக்தியடைந்தவர்கள் இன்புறுகிறார்கள்; ஏனெனில் அவர்கள் காமியங்களை நாடுவதில்லை. (10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/33&oldid=1361972" இலிருந்து மீள்விக்கப்பட்டது