பக்கம்:தம்ம பதம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சான்றோர் ☐ 63


259. எவனிடம் சத்தியம், தருமம், அஹிம்சை, நிதானம், புலனடக்கம் முதலிய பண்புகள் நிலைத்திருக்கின்றனவோ, எவன் மலங்கள் நீங்கிப் புத்திமானாயிருக்கிறானோ, அவனே தேரன் எனப்படுவான். (6)

260. பொறாமையும், பேராசையும், தீயொழுக்கமும் உள்ளவன் , பேச்சாலோ உடல் அழகாலோ மட்டும் நல்லவனாகிவிட மாட்டான். (7)


261. எவன் இவைகளையெல்லாம் அழித்துவிட்டானோ வேரொடு பறித்து எறிந்துவிட்டானோ, எவன் குற்றமற்ற மேதாவியோ, அவனே உண்மையான அழகுடையவன். [1] (8)

262. புலனடக்கம் இல்லாமல் பொய் சொல்லித் திரியும் ஒருவன், தலையை முண்டிதம் செய்து கொள்வதால் முனிவனாகிவிட மாட்டான் . இச்சைகளுக்கும் பேராசைக்கும் அடிமைப்பட்டிருக்கும் ஒருவன் முனிவனாயிருப்பது எங்ஙனம்? (9)

263. பாவ உணர்ச்சிகள் சிறியவையாயினும், பெரியவையாயினும், அவைகளை எப்போதும் அடக்கியாள்பவனே முனிவன் எனப்படுவான். ஏனெனில், அவனே தீமை அனைத்தையும் அவித்தவன். (10)

264. மற்றவர் பிச்சை ஏற்பதால் மட்டும் ஒருவர் பிக்கு ஆகிவிடமாட்டான். தருமம் அனைத்தையும் மேற்கொள்பவனே பிக்கு, ஒரு பகுதியை மட்டும் மேற்கொள்பவன் பிக்கு ஆகான். (11)

265.எவன் நன்மைக்கும் தீமைக்கும் அப்பாற்பட்டு, பிரம்மசரியத்தைக் கைக்கொண்டு, கருத்தோடு உலகிலே சஞ்சரிக்கிறானோ, அவனே பிக்கு எனப்படுவான். (12)


  1. உருவ அழகும் குண அழகும் பொருந்தியவன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/65&oldid=1358559" இலிருந்து மீள்விக்கப்பட்டது