இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல் இருபது
மார்க்கம்
271. மார்க்கங்களின் அஷ்டாங்க மார்க்கமே [1] சிறந்தது. வாய்மைகளில் நான்கு வாய்மைகளே [2] . சிறந்தவை; சீலங்களில் வைராக்கியமே [3] சிறந்தது; மக்களில் ஞானக்கண் [4] உடையவனே சிறந்தவன். (1)
272 . இதுதான் மார்க்கம், அறிவைப் புனிதமாக்க வேறு வழியில்லை. இதையே பின்பற்றுக; மாரனை வெல்ல இதுவே , ஏற்றது. (2)
273. இந்த மார்க்கத்தில் சென்றால், உன் துக்கங்கள் தொலையும். சதையில் தைத்துள்ள முட்களை (துன்பங்களை ) நீக்கும் வழியை அறிந்ததும்,நான் இந்த மார்க்கத்தை உபதேசிக்க நேர்ந்தது. (3)
274. நீயேதான் முயற்சி செய்ய வேண்டும். ததாகதர் உபதேசம் மட்டுமே செய்வர். இந்த மார்க்கத்தில் இறங்கி, தியானத்தில் ஆழ்ந்தவர்களுக்கு மாரனுடைய பந்தங்கள் [5] விலகும். (4)
- ↑ அஷ்டாங்க மார்க்கம் நற்காட்சி, நல்லுாற்றம், நல்வாய்மை,நற்செய்கை , நல்வாழ்க்கை, நல்லுாக்கம், நற்கடைப்பிடி, நல்லமைதி என்ற எட்டுப்பிரிவுகளுள்ள மார்க்கம். இவை பற்றிய விளக்கத்தை அனுபந்தம் ஒன்றில் காணலாம்.
- ↑ நான்கு வாய்மைகள்-துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்ற உண்மைகள்
- ↑ வைராக்கியம்-வெறுப்பு. ஆசைகளை வெறுத்து ஒதுக்கல்.
- ↑ ஞானக்கண்-உண்மையை ஊடுருவிப் பார்க்கும் சக்தி.
- ↑ மாரனுடைய பந்தங்கள்-பாவம், மரணம். முதலியவை.
த-5