76 ☐ தம்ம பதம்
322. தனபாலகன் என்ற பெயருள்ள யானையானது மத நீர் பொழியும் காலத்தில் அடக்கமுடியாததாகிறது. கட்டிவைத்தால், அது ஒரு கவளம் (உணவு) கூட உண்ணாது. அதன் நினைவெல்லாம் யானைகள் வசிக்கும் வனத்திலேயே இருக்கும் - (5)
323. மலத்தைத் தின்று வரும்பெரும் பன்றியைப்போல், ஒருவன் உடல் கொழுத்துப் பெருந்தீனியில் பற்றுள்ளவனாகி, நீங்காத சோம்பலிலும் நித்திரையிலும் ஆழ்ந்து, படுக்கையிலே புரண்டுகொண்டிருந்தால், அந்த அறிவிலி திரும்பத் திரும்பப் பிறவியெடுக்க நேருகிறது. (6)
324. முற்காலத்தில் எனது மனம் தன் விருப்பம் போல் சுற்றித் திரிந்துகொண்டிருந்தது. யானை மதம் கொள்ளும்போது பாகன் அங்குசத்தால் அதனை அடக்குவதுபோல, இப்போது என் மனத்தை நான் அடக்கியாள்வேன். (7)
325. கருத்தில்லாமல் இருக்கவேண்டாம்; மனத்தில் சிந்தனைகளை அடக்கிக் காக்கவும், சேற்றில் விழுந்த யானையைக் கரையேற்றுவது போலத் தீய வழியிலிருந்து உன்னை மீட்டுக் கொள்க. (8)
326. அறிவாளியாயும், உன்னோடு ஒத்துப்பழகக் கூடியவனாயும், அடக்கத்தோடு நல்லொழுக்கமுடையவனாயும் ஒரு தோழன் கிடைப்பானாகில், எல்லா இடையூறுகளையும் கடந்து, அவனுடன் கருத்தோடும் மகிழ்ச்சியோடும் நட்புக் கொள்வாயாக. (9)