இயல் இருபத்தைந்து
பிக்கு
358. கண்ணைக் காத்தல் நலம்; காதைக் காத்தல் நலம்; நாசியைக் காத்தல் நலம்; நாவைக் காத்தல் நலம். (1)
359. உடலைக் காத்தல் நலம். வாக்கைக் காத்தல் நலம்; மனத்தைக் காத்தல் நலம்; எல்லாவற்றையும் காத்துக் கொள்ளல் நலம். எல்லாவற்றையும் காத்துக்கொள்ளும் பிக்கு சகல துக்கங்களிலிருந்தும் விடுபடுகிறான். (2)
360. எவன் கைகளை அடக்கி பாதங்களை அடக்கி, வாக்கை அடக்கித் தன்னை நன்கு காத்துக் கொண்டவனோ, எவன் தியான இன்பத்திலுள்ளவனோ எவன் மன அமைதி பெற்றுத் திருப்தியுடன் ஏகாந்தமாக இருக்கிறானோ,அவனையே பிக்கு என்பர். (3)
361. நாவடக்க முள்ளவனாய், உயர்ந்த கருத்துக்களை. உபதேசிப்பவனாய், கர்வமற்ற அமைதியுள்ளவனாய்த் தருமத்தையும் அதன் பொருளையும் விளக்கிக் கூறுதல் இனிமையேயாம். (4)
362. தரும உபதேசத்தை மகிழ்ச்சியுடன் பின்பற்றி, தருமத்திலேயே திளைத்து, தருமத்தையோ எப்போதும் சிந்தனை செய்து, தரும வழியிலேயே நடக்கும் பிக்கு உண்மையான தருமத்திலிருந்து பிறழ்வதில்லை. (5)
363. அவன் தனக்குக் கிடைத்ததை அலட்சியமாக எண்ணாமலும், மற்றவர்களிடம் பொறாமை கொள்ளாமலும் இருக்க வேண்டும். பிறரைக் கண்டு பொறாமைப்படும் பிக்கு மனச் சாந்தி, பெறுவதில்லை. (6)