பிராமணன் ☐ 91
397. தான் ஒரு குற்றமும் செய்யாதிருந்தும் தனக்குக் கிடைக்கும் வசைகளையும், அடிகளையும்,சிறைத் தண்டனையையும் பொறுமையோடு ஏற்றுக் கொண்டு பொறுமையே தன் ஆற்றலாகவும், பலங்களே [1] தன் சேனைகளாவும் பெற்றுள்ளவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (17)
398. வெகுளியை விட்டவன், கடமைகளிலே கவனமுள்ளவன், ஒழுக்க விதிகளின்படி நடப்பவன் , பரிசுத்தமானவன், தன்னடக்க முள்ளவன் எவனோ, எவன் இவ்வுடலைக் கடைசி உடலாகக் கொண்டுள்ளானோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (18)
399. தாமரை இலைமேல் தண்ணிர் போலவும், ஊசி முனை மேல் கடுகு போலவும், இன்பங்களோடு: ஒட்டாமலுள்ளவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (19)
400. இந்தப் பிறவியிலேயே தன் துக்கங்கள் அழிந்தொழியும் என்று அறிந்து, தன் (பாவச்) சுமைகளை எறிந்து விட்டவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்பேன். (20)
401. ஆழ்ந்த ஞானமும் மேதா விலாசமும் பெற்றவன்; நன்மார்க்கத்தையும் துன்மார்க்கக்தையும் அறிந்தவன், மெய்ப் பொருளை அடைந்தவன் எவனோ. அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (21)
402. இல்லறத்தார், துறவறத்தார் இருவருடனும் கலந்து கொள்ளாமலும், அடிக்கடி. (பிறருடைய) வீடுகளுக்குச் செல்லாமலும் தேவைகளைக் குறைத்துக் கொண்டும் வாழ்பவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (22)
- ↑ பலங்கள்-சிரத்தை, சாமர்த்தியம், ஞாபகம், மனனம், ஊகித்தல் ஆகிய பலங்கள்.