பக்கம்:தயா.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் | 7 | ஐயே, இந்தப் பெரியவர்களின் பெரிய தனமே! சிங்காரச் சொல்லே! 'ஏற்கெனவே பட்டது போதும், இந்தத் தடவையும் கிராமத்தில் மருத்துவச்சியிடம் மாட்டிக்கொள்ள வேண்டாம். பிரசவம் இங்கேயே நடக்கட்டும்' என்று தனக்கு துணைக்கும் தங்களுக்கு வேலைக்கும் பங்கமில்லாமல், அம்மாவை இங்கு வரவழைத்து விட்டார்கள். ஆனால் யார் வந்தால் என்ன? யார் ஆதரவிலும் ஆறுதல் காணும் நிலையை அவள் உதரம் கடந்தாகிவிட்டது. அதன் உலகத்துள் அது அவளை விழுங்கிக் கொண்டிருந்தது, நாள் ஆக ஆகப் பெரிதாகிக்கொண்டே வரும் வயிற்றின் கனத்தில் கீழ் அமிழ்ந்து கொண்டேயிருந்தாள். மற்றெது பற்றியும் அக்கறையிழந்தாள். இல்லாவிடில், அவளால் ஒரு நிமிஷம் படுத்த இடத்தில் இப்படிக் கிழித்த நாராய்க் கிடக்க முடியுமா? எதையேனும் தட்டிப் பெருக்கி, எடுத்து, அடுக்கிக் கொண்டிருக்க மாட்டாளா? "சும்மா துடைச்சிண்டேயிருந்தால், துடைச்சிண்டே போயிடும், துடைக்காதே. உன் சுத்தத்துக்கும் ஒரு அத்து உண்டு' என்று மாமியார் எரிந்து விழுவார். "நீ கறுப்பு நாயை வெள்ளை நாயாக்கச் செலவழிக்கும் புளிக்கும் சோப்புக்கும் ஒரு புளியந்தோப்பும் பாக்டரியும்தான் கட்டுப்படியாகும். ஆனால் உன் சுகத்துக்கு ஈடுகொடுக்கும் அந்தஸ்து எனக்கு இல்லையே' என்று அவள் கணவன் கேலி செய்வான். யார் என்ன வேனுமானாலும் சொல்லிக் கொண்டு போகட்டும் என்று இருந்தவளுக்கு, இப்போது எது எப்படி வேணுமானாலும் போகட்டும் என்ற நிலை வந்து விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/177&oldid=886298" இலிருந்து மீள்விக்கப்பட்டது