பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

யோசித்து யோசித்துப் பார்த்தேன். கண், மூக்கு, நாக்கு, வாய், கை, கால், விரல்—இப்படி ஒன்றையும் பாக்கி வைக்காமல் எழுதிவிட்டார்கள் கட்டுரையாசிரியர்கள். ஆனால், பாவம் இந்தத் தோள்களை மாத்திரம் ஏனோ மறந்து விட்டார்கள்!

அந்த நாளில் என்னுடைய தோழி ஒருத்தியின் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அப்பொழுது, ‘தோள் தூக்க மாமா எங்கே?...சிக்கிரம் வரச் சொல்லுங்கள்?’ என்றார்கள். சற்று நேரங்கழித்து ஈர்க்குச்சி போன்ற ஒரு மனிதர் வந்தார். தோள் வலி-அதாவது தோள் பலம் அவருக்கு இருக்க முடியாது. ஆனால் ‘தோள் வலி’ நிச்சயம் ஏற்பட்டிருக்கத்தான் வேண்டும்! ஏன் தெரியுமா? அந்த மணப் பெண்ணைத் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டார். பிறகு பெண் தன் கழுத்திலுள்ள மாலையை மாப்பிள்ளை கழுத்திலும், மாப்பிள்ளை தன்.மாலையைப் பெண் கழுத்திலுமாகப் போட்டுக் கொண்டார்கள். திருமணச் சடங்குகளிலே தோள் அறிமுகப்படுத்தப்படும் அழகை வர்ணிக்க ஓராயிரம் போட்டோப் படங்கள்தாம் தயை புரியவேண்டும்!

கோயில் திருவிழாக்களிலே, பல்லக்கில் எழுந்தருளியிருக்கின்ற எல்லாம் வல்ல ஸ்வாமியைத் தோளில் தூக்கிக் கொண்டு ஊர்வலம் வரும்போது, ‘சற்று பொறுமேங்காணும்! தோளை மாற்றிக்கறேன்!’ என்ற கூச்சல்களையும், ‘தோள் போட வாருங்கள்!’ என்ற வரவேற்புகளையும் நீங்களெல்லாம் கட்டாயம் கேட்டிருப்பீர்களே!