பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

ஆயிரம் காலத்துப் பயிர் என்று மணவினையைச் சொல்லுவார்கள். ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு திருமண வைபவத்தை நடத்தலாம் எனவும் ஒர் அகராதி பழமொழி சொல்கிறது. ஆக, ஆயிரம் என்ற இந்த எண்ணிக்கைக்கும் ‘வதுவை விழாச் சடங்குக்கும் எவ்வகையில் விட்டகுறைதொட்டகுறை இருக்கிறதோ, அல்லது இருக்க முடியுமோ? புரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டிலும் என்னால் உணர முடிகிறது. திருமணவினை என்பது ஒவ்வொருவருக்கும் புதிய அனுபவம்; ஒரு வாய்ப்புங்கூட! வாழ்ந்து காட்டிய ஆயிரம் பேர்களின் முன்னிலையிலே கல்யாணத்தினை நடத்தி, அவர்களுடைய நல்லாசிகளை அரிசிமணிகள் வாயிலாகப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்கிற இப்புனித லட்சியத்தை ஈடேற்றிவைக்கும் கைங்கரியத்தில் முழுப்பங்கு பெறுபவை இந்தத் திருமண அழைப்புகளே அன்றே! கல்யாணம் காட்சி என்றால் யாராவது சும்மா வந்துவிடுவார்களா? வந்தால், அவர்களுக்குத்தான் கெளரவம் இருக்கமுடியுமா? இந்த அழைப்புதான் திருமணத்திற்கு உயிர்நாடி மாதிரி, ஒட்டும் இரு உள்ளங்களுக்கு ஒரு கண்ணாடித்தட்டு இது. ஒட்டாத உள்ளங்களை ஜோடி சேர்த்துக் கொடுக்கும் பதிவுச்சீட்டு இது. கல்யாணத்திற்குத் தலை கொடுக்கும் இருதரப்புக்காரர்களின் பூர்வ கதை பூராவையும் சொல்லிக் காட்டும் முன்கதைச் சுருக்கமும் இதுவேதான்! பின்கதைக்கு ஒர் உரை கல் இதுவென்றாலும், நீங்கள் ஆச்சரியப்படக் கூடாது!