பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91


தமிழ்க் கடவுளுக்குச் சேவல் என்றால் வெகுபிரியம். அதனால் சேவற்கொடி அவனுக்கு உகந்ததாகி, "சேவற்கோடியோன்" என்ற பெயரும் ஏற்பட்டது போலும்!

இந்திரன் சேவல் உருக்கொண்டு கூவ, அதன் மூலம் கௌதம முனிபுங்கவர் நீராடச் செல்ல, அந்த இடைப்பொழுதில் இந்திரன் அகலியையின் கற்பைச் சூறையாட நினைத்தான். தேவர் தலைவனுக்கு ஏற்பட்ட பழியில், அந்தச் சேவலுக்கும் பங்கு கிடைக்க நேர்ந்தது, அனுதாபப்படத்தக்க விஷயமேதான்!

இலக்கிய உலகத்திலும் கோழிகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி உண்டு.

என்னுடைய கிராமியக் கதைகளில் கோழி கூவினால்தான் பொழுது விடியும். பட்டிக்காட்டுப் பூவையான மருக்கொழுந்துவுக்குப் போட்டிபோடும் முத்தையனும் சிங்காரமும் கோழிப் பந்தயம் ஒன்றை நடத்தி, அதன் மூலம்—அதாவது, யார் கோழி கெலிக்கிறதோ, அந்தக் கோழிக்குரியவர் அந்த மருக்கொழுந்தின் கழுத்தில் மூன்று முடிச்சுக்கள் இடுவதும் இயல்பான சங்கதிதானே! அரிசிக் குறுணைகளைத் தன் வீட்டுக் கோழிகளுக்குத் தூவி விட்டுக்கொண்டே பக்கத்து வயலில் நாற்று நடும் சோமையாவை “லவ்" செய்யும், பரிபக்குவமும் என்னுடைய கதை நாயகியான பஞ்சவர்ணத்துக்கு மட்டுமே சொந்தமாகும்!