பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி



மே மாதம் 27-ஆம் தேதி கில்மல்லக் படை வீடுகள் தாக்கப்பட்டன. அந்தப் போராட்டம் மிகவும் புகழ் பெற்றது. தான்பிரீன் அதில் கலந்து கொள்ளவில்லை. ஸீன்மலோன் தோண்டர்களைத் தலைமை வகித்து நடத்தினார். அப்போராட்டம் இரவு 12 மணிக்கு ஆரம்பமாகி காலை 7 மணி வரை நடந்தது. கில்மலைக் படை வீடுகள் மிகப்பெரியனவாய், உறுதியான கட்டிடங்களுடன் நகரின் நடுமத்தியில் இருந்தன. தொண்டர்கள் ஒரு பெரிய சாப்பாட்டு விடுதியையும் வேறுபல வீடுகளையும் அமர்த்திக் கொண்டு அவற்றில் தங்கியிருந்து போராட்ட நேரத்தில்தான் வெளியே சென்றனர். முதலில் படை வீடுகளின் மேல் ஒரு குழாய் மூலம் பெட்ரோலைச் சொரிந்தனர். தீ வைத்தவுடன் அவ்விடுகள் எரிந்து தரைமட்டமாயின. போராட்டத்தில் ஸ்கல்லி என்ற ஒரு தொண்டன் குண்டுபட்டு இறந்தான். பகைவர்களில் காயமடைந்தவர் அறுவர் இறந்தவர் இருவர். இறந்துபோன இரு பீலர்களின் கதை மிகப் பரிதாபமானது. அவர்கள் முதலிலேயே தொண்டர்களுக்குப் பணிந்து விடவேண்டும் என்று சொன்னதற்காக மற்றப் போலிஸார் அவர்களை ஒரு அறைக்குள் தள்ளிப்பூட்டிவிட்டனர். இந்த அறை தீப்பற்றி எரியும் பொழுது அந்த இருவரும் தப்பிச்செல்ல வழியின்றி எரிந்து சாம்பலாயினர். போலிஸாருக்கு தலைமை வகித்து நின்ற சார்ஜெண்டு பின்னால் அரசாங்கத்தால் ஜில்லா இன்ஸ்பெக்டர் வேலைக்கு உயர்த்தப்பட்டார். சில மாதங்களில் தொண்டர்கள் அவரையும் வானுலகத்திற்கு அனுப்பி விட்டனர்.

அடுத்த பெரும்போராட்டம் ஊலாவில் நடந்தது. அன்றுதான் சர்க்கார்படையின் பிரிகேடியர் ஜெனரல்களுள் ஒருவரான லூகாஸ் தொண்டர்களால் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து தப்பி ஓடினார்.

110