பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


லிமெரிக் வீதியில் இத்தகைய பட்டாளம் ஒன்று தபால் பாதுகாப்புக்காக வந்து கொண்டிருந்ததால் அதை எதிர்த்துப் போராடவே தொண்டர்கள் மேலே கூறிய முறையில் மறைவாகக் காத்துக் கொண்டு நின்றனர். அவர்கள் நின்ற இடம் ஊலா கிராமத்திலிருந்து அரை மைல் தூரத்திலிருந்தது. அங்கிருந்து திப்பெரரி ஆறுமைல்; லிமெரிக் பதினைந்து மைல்; ஸாஹெட்பக் நான்குமைல். இவ்விடங்களைச் சுற்றிலும் சமவெளிகள் இருந்தமையால் தப்பியோடுவதற்குப் போதிய செளகரியங்கள் இருந்தன. ராணுவக் கார் காலை 10.30 மணிக்கு வரக் கூடும் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து, அதற்கு முன்னதாகவே சென்று ஒரு பெரியமரத்தை வெட்டி அதனால் சாலையை அடைத்து விட்டுப் புதர்களில் மறைந்திருந்தனர். ஊலாவில் ஒரு பீலர் படையும் அதற்கு இரண்டு மைலுக்கு அப்பால், லிமெரீக் சந்திப்பில் ஒரு பீலர்படையும் இருந்தன. ஆதலால் எந்த நிமிஷத்தில் என்ன நேருமென்று தெரியாமலிருந்தது.

குறித்த நேரத்தில் பட்டாளத்தாருடைய கார் மிக வேகமாக ஓடிவந்தது. தொண்டர்கள் அதைக் குறிவைத்துச்சுட்டனர். உடனே காருக்குள்ளேயிருந்த சிப்பாய்கள் அனைவரும் கீழே குதித்து மறைவாக நின்று கொண்டு பதிலுக்குச் சுட ஆரம்பித்தனர். அதுவரை அமைதியாயிருந்த அந்த நாட்டுப் புறத்தில் திடீரென்று குண்டுகள் இடி இடித்தது போல முழங்க ஆரம்பித்தன. முதல் நிமிடத்திலேயே இரண்டு ஆங்கிலேயர்கள் குண்டுபட்டுத் தங்கள் துப்பாக்கிகளை எறிந்து விட்டுக் கீழே சாய்ந்து மடிந்தனர். பட்டாளத்தார் தொண்டர்களுடைய குண்டு வந்த திசையைப் பார்த்துச் சுட்டுக்கொண்டேயிருந்தனர். தொண்டர்கள் மொத்தம் பத்துப் பேரேயிருந்தனர்; அவர்கள் ஒவ்வொருவரிடமும் பத்துமுறை கடுவதற்குத்தான் மருந்து இருந்தது. அந்நிலையில் திடீரென்று லிமெரிக் பக்கத்திலிருந்து மற்றொரு ராணுவக் காரும் வந்து கொண்டிருந்தததை அவர்கள் கண்ணுற்றுனர். இவ்வாறு ஏற்படுமென்று அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. தற்செயலாக எதிரிகளுக்கு உதவியாட்கள் வந்துவிட்டனர் தொண்டர்கள் திகைத்தனர். அவர்கள் பின்வாங்கி மெதுவாக வேறிடத்திற்குச் சென்றுவிடத் தீர்மானித்துப் புறப்பட்டனர்.

தொண்டர் மறையும் பொழுதும் சிப்பாய்களைப் பார்த்துச் சுட்டுக் கொண்டே பின்வாங்கி வந்தனர். அந்நேரத்தில் சிப்பாய்களுக்கு உதவியாக ஊலாவிலிருந்தும் ஆறு பீலர்கள் வந்து கொண்டிருந்தனர். தொணடர்களிடம் போதிய குண்டுகளிருந்திருந்தால் அவர்கள் ஊலா போலிஸ் நிலையப் பக்கமாகச் சிலரை அனுப்பிச் சுடக் கொல்லியிருப்பார்கள். குண்டோசைகேட்டால் பீலர்களில் எவனும் சிப்பாய்களின் உதவிக்காக வெளியே வந்திருக்கமாட்டான். அதற்கும் வழியில்லாமற் போயிற்று. எனவே அவர்கள் யாருக்கும் காயப் படாமலும் உயிர்ச் சேதமில்லாமலும் போராட்டத்தில் இருந்து விலகிச் சென்று மறைந்துவிட்டனர். எதிரிகளில் மூவர் இறந்தனர்; மற்றும் மூவர் காயமடைந்தனர்.

113