பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


களைப் பலிவாங்கினர் என்பதையும் பிற்காலச் சரித்திர ஆசிரியர்களே கணக்கிட்டுக் கூற முடியும். இந்தக் கொடுமைகளைச் செய்துவந்த 'பிளாக் அன்டு டான்' பட்டாளத்தாரிற் பலர் பின்னால் தாங்கள் செய்த கொடுமைகளை மறக்க முடியாமற் பைத்தியம் பிடித்து அலைந்தனர். தற்கொலை செய்து கொண்டு மடிந்தனர் என்றால் ஐரிஷ் மக்கள் அந்தப் பாதகர்களிடம் எவ்வளவு துன்பப்பட்டிருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.

அதேசமயத்தில் தொண்டர் படையும் வலிமையடைந்து தீரமான பட்டாளமாகி விட்டது. அது ஐரீஷ் குடியரசுப் படை என்ற பெயருக்குப் பொருத்தமாயிருந்தது. 1918ஆம் ஆண்டு தான்பிரின், டிரீஸிடம் கூறிய வாக்கு இரண்டு வருடங்களில் பலித்து விட்டது. முதலில் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டால் அது பின்னால் நாடெங்கும் பரவிவிடும் என்று அவன் கூறியிருந்தான். அதன்படி தேசத்து வாலிபர்கள் சுதந்திரப்படையில் ஆயிரக்கணக்காய்ச் சேர்த்து வந்தனர். ஐரிஷ் மக்கள் எவ்வளவு துன்பப்பட்டாயினும் சுதந்திரம் பெற்றே தீரவேண்டும் என்று விரதம் பூண்டனர். அயர்லாந்தின் சுதந்திரத்தைக் கடைசிவரை நசுக்கியே தீரவேண்டும் என்று இங்கிலாந்தும் கண்மூடித்தனமாக வெறிகொண்ட செயல்களில் இறங்கி நின்றது.

115