பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


ஹாலுக்கும் மத்தியிலிருந்தது. வயிட் ஹாலுக்குச் செல்லக்கூடிய டிராம் வண்டி அப்பக்கத்தில் வந்த பொழுது அவன் உடனே அதில் பாய்ந்து மேல் தளத்தி ஏறி உட்கார்ந்து கொண்டான். அவனைத் தொடர்ந்து வேறு ஐந்து பேர்கள் அவ்வண்டியிலேறி வருவதையும் அவன் கண்டான்.

அவர்களில் இருவர் சர்க்காருடைய கொலைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவன் தெரிந்து கொண்டான். இக்கொலைக்கூட்டத்தார் ஜெனரல் ரியூடர் என்பவலால் நியமிக்கப்ட்டவர்கள். அவர்களுக்கு 'உதவிப் படையினர்' என்று பெயர். ரியூடரே அப்படையினருக்குத் தலைவர். அப்படையினர் செய்து வந்த அட்டகாசங்களுக்கு அளவேயில்லை. அவர்கள் கொலைக்கு அஞ்சாதவர்கள். தெருக்களில் எந்தப் புரட்சிக்காரரைக் கண்டாலும் சந்தேகப்படத்தக்க நபர்களைக் கண்டாலும் உடனே கண்ட இடத்திலேயே சுட்டுக் கொல்ல வேண்டு மென்று இவர்களுக்கு உத்தரவு. அவர்கள் கொலைகள் செய்ததாக வழக்குகள் ஏற்படாமல் பாதுகாப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தார்கள். இந்த இரகசியப்படை அமைக்கப்பட்டிருந்த விஷயம் பீலர்களுக்கும் பட்டாளங்களுக்குங் கூடத் தெரியாது. ஆனால் தொண்டர்களுக்கு அப்படையைப் பற்றியும் அப்படையிலுள்ளவர்களில் யார் யார் எத்தனை கொலைகளையும் கொடுமைகளையும் செய்தனர் என்பதைப் பற்றியும் வெகு நன்றாய்த் தெரிந்திருந்தது. முக்கியமான கொலைகாரர்களுடைய புகைப்படங்களையும் சிரமப்பட்டுக் சம்பாதித்துத் தொண்டர் படைத் தலைமைக் காரியாலயத்தார் எல்லாத் தொண்டர் படைகளுக்கும் அனுப்பியிருந்தனர்.

டிராம் வண்டியில் ஏறிய ஐவரையும் தான்பிரீன் கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவர்களில் இருவர் அவன் அருகில் வந்து பக்கத்திற்கு ஒருவராக ஒரு பக்கத்திலும் உட்கார்ந்து கொண்டனர். ஒருவன் அவர்களுக்கு முன்னால் சென்று நின்று கொண்டிருந்தான். மற்றும் இருவர் முன்பக்கம் சென்று வண்டியின் முகப்பில் நின்று கொண்டனர். கொலைக்கு அஞ்சாத பாதகர்கள் தனக்கு இரு பக்கத்திலும் அமர்ந்திருந்ததால், எந்த நிமிஷத்தில் என்ன அபாயம் நேருமோ என்று தான்பிரீன் மிகவும் எச்சரிக்கையாகக் கவனித்துக் கொண்டிருந்தான். கொலைகாரர்கள் தன்னைக் கண்டு வந்தார்களா, அன்றித் தாங்களாகவே வேறு வேலைகளுக்காக வந்தார்களா என்பது புலனாகவில்லை. ஆனால் இருவர் அவன் பக்கத்தில் வந்து உட்காரக் காரணம் என்ன? இவ்வாறு அவனுக்குப் பல யோசனைகள் தோன்றின. என்ன நேர்ந்தாலும் அவன் போராட்டத்திற்குத் தயாராயிருந்தான். உயிரோடு பகைவர்கள் கையிலே சிக்காமல் அரும்போராட்டம் செய்து எதிரிகளில் பலரைச் சுண்டுக்கொன்ற பின்பே தன் உயிரை விட வேண்டும் என்று அவன் வெகு காலத்திற்கு முன்பே தீர்மானித்திருந்தான்.