உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


துக் கொண்டு பல குண்டுகள் ஜன்னல் வழியாக உள்ளே பாய்ந்தன. அவற்றில் சில அவனுடைய பல அங்கங்களிலும் காயப்படுத்திக்கொண்டு சென்றன.

ஜன்னலின் கீழ்ப்பாகம் திறந்து கிடந்தது. அதைக் கண்டவுடன் தான்பிரீன், டிரீஸி அதன் வழியாகத் தப்பியோடியிருக்க வேண்டு மென்று யூகித்து அதன் வழியாக வெளியேறி, நாற்றுக் கூடத்தின் கூரையின்மேல் குதித்தான். அங்கிருந்து பார்த்தபொழுது, வீட்டைச் சுற்றி எண்ணிறந்த உருக்குத் தொப்பிகள் அவன் கண்களுக்குப் புலப்பட்டன. ராணுவத்தார் யாவரும் நாற்றுக் கூடத்தின் கூரையை நோக்கிச்சுட ஆரம்பித்தனர். தான்பிரீனுடைய நிலைமை அபாயகர மாயிற்று. எந்த நிமிஷத்திலும் குண்டு பட்டுக்கீழே சுருண்டு விழக்கூடிய நிலையில் அவன் துப்பாக்கிகளுக்குக் குறியாய்க் கூரையின் மேல் தனியாக உட்கார்ந் திருந்தான். கூரையை விட்டுக் கீழே இறங்கினால் துப்பாக்கிக் காட்டைத் தாண்டாமல் வெளியேற முடியாது. அந்நிலையில் அவன் இடது கையிலே துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு கூரை ஓட்டைப்பார்த்துச்சுட்டான். கூரையில் ஒரு பெரிய துவாரஞ்செய்து கொண்டு அதன் வழியே உட்புகுந்து உத்திரக்கட்டையைப் பிடித்துக் தொங்கிக் கொண்டிருந்தான். அத்துடன் இடையிடையே வெளியே தலைநீட்டி எதிரிகளை நோக்கிச் சுடுவதையும் அவன் நிறுத்தவில்லை. அவன் கூரைக்குள் மறைந்திருந்ததால் எதிரிகளின் குண்டுகள் அவனைப் பாதிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் திடீரென்று சகல பட்டாளத்தாரும் அவ்விடத்தை விட்டு மறைந்து போயினர்.

பகைவர்களைக் காணாமையால் அவன் மெதுவாக மீண்டும் கூரைமேலேறி அங்கிருந்து தரையின் மீது குதித்தான்.

அச்சமயத்திலெல்லாம் அவனுடைய ஞாபகம் முழுவதும் ஸீன் டிரீஸியைப் பற்றித்தான். அந்த உயிர் தோழன், எங்கேயிருந்தான், என்ன செய்தான் என்ற ஒரு விசயமும் புலப்படவில்லை. அவனுடைய அறிகுறிகளே தென்பட வில்லை. 'டிரீஸீ! டிரீஸீ! என்று அவன் பன்முறை கூவிப்பார்த்தான். பதிலில்லை எங்கேனும் பகைவர்கள் மறைந்திருந்து தன்னைச் சுட்டுவிடாமல் இருப்பதற்காக அவன் தரையின் மேல் படுத்துக் கொண்டு, தோழா! எங்கு சென்றாய்? என்று வினாவினான். பதில் சொல்வார் யாருமில்லை. அவன் மனம் அனலிடப்பட்ட மெழுகுபோல் வருந்திற்று.

கீழே கவிழ்ந்து கிடக்கும் பொழுதுதான் தேகத்தின் பலவீனம் அவனுக்கு நன்றாய்த் தெரியவந்தது. உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை பற்பல புண்களிலிருந்தும் இரத்தம் பெருகிக்கொண்டிருந்தது. குறைந்தது ஆறு இடங்களிலாவது குண்டுகள் புதைந்திருந்தன. அவனுடைய தொப்பியும், மேற்சட்டையும், பூட்ஸுகளும் அறைக்குள்ளே கிடந்தன. உறங்கிக் கொண்டிருந்தவன் திடீரென்று எழுந்து போராட நேர்ந்ததால், அவசரத்தில் அவற்றை எடுத்துக்கொள்ள முடியவில்லை. போதிய ஆடையில்லாமையால், அவன் துன்புற நேர்ந்தது.

12Ꮾ