பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி



அவன் சகல ஏற்பாடுகளையும் செய்து விட்டுக் கடைசியாக டால்பட் தெரு விலிருந்த ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்றான். அங்கு சில முக்கியமான தகவல்கள் கொடுக்கவேண்டியிருந்தது. அந்தக் கடை புரட்சிக்கட்சித் தலைவர்களான டாம் ஹண்டர், பீட்டர் கிளான்ஸி ஆகிய இருவராலும் நடத்தப்பட்டு வந்தது. அவர்கள்.ஜவுளிக்கடை என்று பெயருக்கு வைத்துக் கொண்டிருந்தார்களே தவிர அவ்விடத்தில்தான் குடியரசுப்படை சம்பந்தமான பல வேலைகளும் செய்து வந்தனர். சுருங்கச்சொன்னால், இந்தக் கடையே தொண்டர்களுடைய சதியாலோசனை மணிமண்டபம் என்று கூறலாம். பீலர்களும் அதையறியாமலில்லை. அவர்கள் இரகசியமாய்ப் பல நாட்களாக அதைக் கவனித்துக் கொண்டு வந்தனர். எனவே அங்கு செல்லும் தொண்டர்கள் அங்கு அதிக நேரம் தாமதிப்பதில்லை.

டிரீஸி கடைக்குச் சென்ற சமயத்தில் அங்கு டப்ளின் நகரப் புரட்சிப் பட்டாளத்தின் தலைவர்கள் சிலர் ஓர் அவசரக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். அவன் உள்ளே புகுந்து, கதவண்டையில் நின்று சில தகவல்களைப் பேசிக் கொண்டிருந்தான்.

அதற்குள் பட்டாளத்தார் கடைப்பக்கம் நெருங்கி விட்டனர். கடைமுகப்பில் நின்று கொண்டிருந்த டிரீஸியே பகைவரின் வருகையை முதன் முதல் தெரிந்து கொண்டவன். வேறு இரண்டு மூன்று பேர்கள் கடைக்குள்ளிருந்து துணிந்து வெளியே ஓடினார்கள்.

ராணுவ வாகனங்கள் கடை வாசலில் வந்து நின்றன. அச்சமயத்தில் கடைக்குள்ளிருந்த ஒருவன் வெளியே ஓடினான்; ஒரு சிப்பாய், வாகனத்திலிருந்து கீழே குதித்து அவனை வழிமறிக்கச் சென்றான். அப்பொழுது ஒரு ராணுவ ஒற்றன் முன்வந்து, 'அவனை விட்டுவிடு நமக்கு வேண்டியவன்.அதோ நிற்கிறான்' என்று டிரீஸியைச் சுட்டிக்காட்டினான். டிரீஸி அப்பொழுது கடைக்கு வெளியிலிருந்த தன்னுடைய சைக்கிளில் காலை வைத்து ஏறிக்கொண்டிருந்தான். உடனே ஒற்றன் அவன் மேலே பாய்ந்தான். டிரீஸியா பணிந்து கொடுப்பவன்? இடுப்பிலிருந்த ரிவால்வரை உருவிக்கொண்டு, பகைவனைத் தாக்கலானான். உடம்பு முழுவதும் சல்லடைக் கண்ணாகத் துளைக்கப்படும்வரை அவன் பணிய மாட்டான் என்பது சிப்பாய்களுக்கு எப்படித் தெரியும்? ஆனால் அவன் போராட்டத்திற்கு தயாராயில்லாதபொழுது, எதிர்பாராத நிலையில் பகைவர்கள் அவனைச் சூழ்ந்து நின்றனர்.

வாகனங்களிலிருந்த ராணுவ வீரர்கள் அனைவரும் தங்களுடைய துப்பாக்கிகளை டிரீஸியை நோக்கிப் பிடித்துக் கொண்டு சுட ஆரம்பித்தனர். அவர்களுடைய ஒற்றன் டிரீஸியுடன் போராடிக் கொண்டிருந்ததால் அவன் மேலும் குண்டுகள் படக்கூடும் என்பதை அவர்கள் பொருட்படுத்தவேயில்லை. ஒரு மனிதனை எதிர்ப்பதற்கு எத்தனை சிப்பாய்கள் எத்தனை இயந்திரத்துப்பாக்கிகள்

132