பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


டிரீஸியைச் சுற்றி நெருப்பு மழை பொழிந்தது. அவன் உடலெல்லாம் குண்டுகள் பாய்ந்தன. கடைசிவரை பகைவரை நோக்கிச் சுட்டுக்கொண்டே, அந்த உத்தம வீரன் உயிர்துறந்து பெற்றெடுத்த புண்ணிய பூமியின் மடியிலே சாய்ந்தான் அவனுடன் அவ்வழியாகச் சென்ற மூவர்களும் ராணுவத்தாருடைய குண்களுக்கு இரையாயினர். டிரீஸியுடன் போராடிய ஒற்றனும் படுகாயமடைந்து கீழே வீழ்ந்துகிடந்தான்.

தேசத்திற்கு இதயத்தையும், தொண்டிற்குக் கைகளையும் அர்ப்பணம் செய்து டிரீஸியின் வாழ்க்கை இவ்வாறுமுடிந்தது. தோழனுடைய உயிரைப் பாதுகாக்க அவன் தன் ஆருயிரையே பலிகொடுத்தான் மாளிகைகளில் தங்கி, அறுசுவையுண்டிகளை உண்டு, கோழைகளாயும், அடிமைகளாயும் அந்நியருடைய கொடுங்கோலுக்குப் பணிந்து வாழும் மனிதர்களின் நடுவிலே, பெற்று வளர்த்த தாயின் மானத்தை அந்நியர் குலைத்துக் கொண்டிருக்கும் பொழுது வீரத்திரு மகன் சுகத்தையும் போகத்தையும் விரும்புவானா? ஸீன் அவை ஒன்றையும் விரும்பாது விட்டையும் வாசலையும் விட்டு, உற்றாரையும் பெற்றாரையும் துறந்து பகலில் தங்கிய இடத்தில் இரவில் தங்காது அலைந்து, பகைவருடன் பற்பல இடங்களில் வீரப் போராட்டங்கள் செய்து, கடைசியாக டப்ளின் கடைத் தெருவில் பகைவருடைய குண்டுகளை நெஞ்சிலேதாங்கி வீர மரணமடைந்தான்!

அவன் படுக்கும் மெல்லிய பஞ்சனை கல்லறையின் கீழுள்ள சவக்குழி: அவன் உண்ணும் சுவையுள்ள உண்டி நஞ்சினும் கொடியது!

அவன் வாழ்விலும் வீரன், சாவிலும் வீரன். அவனைப்பர்க்கிலும், ராணுவ அறிவும், போர்த்தந்திரங்களும் தெரிந்தவன் அயர்லாந்தில் கிடையாது. 28 வயது நிரம்பும் முன்னரே, அவன் இறந்துவிட நேரினும், அந்த வாழ்க்கையில் அவனுடைய அபாரத் திறமைகளை வெளிக்காட்டி விட்டான். பொதுவாக ஐரிஷ் தொண்டர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு செய்துவந்த கெரில்லாச்சண்டை வல்லமை மிக்க தலைவர்களால் மிகத் திறமையோடு நடத்தப்பட்டது என்பதை உலகத்தார் அனைவரும் ஒப்புக்கொள்வர். இத்தலைவர்களிலே சிறந்தவன் டிரீஸி. அவனது கூரிய யுத்திகளை வைத்துக் கொண்டே மற்றத் தளகர்த்தாக்கள் அற்புதப் போராட்டங்கள் செய்து பெரும் புகழ் படைத்தனர்.

டால்பட் தெருவில் நடந்த போராட்டத்தைக் குறித்து தான்பிரீனுக்குப் பல நாட்கள் வரை ஒன்றுமே தெரியாது. அவன் குருட்டு நம்பிக்கை கொள்பவனல்லன்; அவனிடம் கற்பனா சக்தியும் அதிகமில்லை. அப்படியிருந்தும் 13ஆம் தேதி வியாழக்கிழமை மாலை, அவன் தனது கட்டிலின் பக்கத்திலே டிரீஸியின் உருவம் வந்து நின்றதாகக் கண்டான். இதைக் கேட்டவர்கள் அது கனவு என்றும், மனைவிகற்பம் என்று சமாதானம் கூறி விடலாம். ஆனால் அவனுக்குத் தான் கண்ட காட்சியை என்றும் மறக்க முடியவில்லை.

133