பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


பிறகு அவன் பிலடல்பியா, கலிபோர்னியா முதலிய நகரங்களைப் பார்வையிட்டான். அக்காலத்தில் அவனுக்கு அயர்லாந்தில் நடந்து வந்த விஷயங்களைக் குறித்து அடிக்கடி தெரிந்து கொள்ளச்சந்தர்ப்பம் ஏற்பட்டது. உடன்படிக்கைக்குப் பிறகு அயர்லாந்தின் நிலைமையைக் குறித்து அமெரிக்கப் பத்திரிகைகள் விரிவான செய்திகளை வெளியிட்டு வந்தன. அவற்றிலிருந்து தொண்டர்கள் இரு பிரிவாகப் பிரிந்து ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாய்த் தெரிந்தது. ஒவ்வொருநாளும் அவர்களுக்குள் மனஸ்தாபம் பெருகிக்கொண்டே வந்தது. அயர்லாந்திலுள்ள பிளவு அமெரிக்காவிலிருந்த ஐரிஷ் காரர்களுக்குள்ளும் பரவிவிட்டது. அவர்களும் இருபிரிவாகப் பிரிந்து நின்றனர்.

மார்ச் மாதம் ஆரம்பத்தில் லிமெரிக் நகரில் தொண்டர்கள் இருபிரிவாகப் பிரிந்து சண்டைக்குத் தயாராயிருந்ததாகச் செய்திகள் வெளிவந்தன. ஒரு பிரிவினர் உடன்படிக்கையை ஆதரித்தும், மற்றப் பிரிவினர் எதிர்த்தும் நின்றனர். அவர்களுக்குள் சண்டை ஆரம்பித்து விட்டால், தேசம் முழுவதும் உடனே உள்நாட்டுக் கலகம் பரவிவிடும். லிமெரிக் நகரத் தொண்டர்கள் ஒரு சிறு சமாதானம் செய்து கொண்டு தான்பிரீனை உடனே புறப்பட்டு வரும்படி கம்பியில்லாத் தந்திமூலம் ஒரு செய்தி அனுப்பியிருந்தனர்.

தான்பிரீன் அப்பொழுது கலிபோர்னியாவில் இருந்தான். இரண்டு தினங்களில் அவன் அங்கிருந்து சிக்காகோவுக்கும் பிலடல்பியாவுக்கும் சென்று, பழைய நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, ஹோகனுடன் நியூயார்க் நகரையடைந்தான். அங்கிருந்து கப்பலேறுவது எளிதென்று அவர்கள் கருதியிருந்தனர். போதுமான பனமும் அனுமதிச் சிட்டுக்களும் இல்லாமையால், அவர்கள் அமெரிக்காவுக்கு வரும்பொழுது ஏற்பட்ட கஷ்டம் அங்கிருந்து புறப்படும் பொழுதும் ஏற்பட்டது.

தான் பிரினும் ஹோகனும் பின்னும் பல ஏமாற்றங்களை யடைந்து, கடைசியாக மிகுந்த முயற்சியின்மேல் ஒரு கப்பலில் ஏறிக் கொண்டு அயர்லாந்திலுள்ள கோப்நகரை நோக்கிப் புறப்பட்டனர்.

ஏப்ரல் மாத ஆரம்பத்தில் அவர்கள் கோப் நகரை அடைந்தனர். அங்கு ஒரு நபர் அவர்களைச் சந்தித்து வரவேற்று, தான்பிரீனுடைய மனைவி ஓர் ஆண் மகனைப் பெற்றிருப்பதாயும், தாயும் குழந்தையும் அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாயும் அறிவித்தார்!

141