பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


அளவற்ற துக்கமடைந்து பரிதவித்த போதிலும், எதிரிகள் முன்பு தைரியத்தைக் கைவிடாதது போல் பாவனைசெய்து கொண்டான்.

பிறகு, அவன் கால்பல்லிக்குக் கொண்டு போகப்பட்டு, அங்கிருந்து திப்பெரரிக்குக் கொண்டு போகப்பட்டான். திப்பெரரியிலிருந்த பிரீஸ்டேட் அதிகாரிகள் அவனை லிமெரிக் சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவன் இரண்டுமாதம் வைக்கப்பட்டிருந்தான். அந்தச் சிறையில் அவன் முன்னால் ஆஷ்டவுன் போராட்டத்தில் காயப்படுத்திய லார்ட் பிரெஞ்சினுடைய கார் டிரைவரைக்காண நேர்ந்தது. அந்த டிரைவர் லிமெரிக் சிறையில் ஓர் உத்தியோ கஸ்தனாயிருந்தான்.

லிமெரிக்கிலிருந்து தான்பிரீன் மெளண்ட்ஜாய் சிறைக்கு மாற்றப்பட்டான். அங்கே ஒரு வசதியுமில்லை. எனவே அவன் உண்ணவிரதம் இருக்க நேர்ந்தது. 12நாள் உண்ணாவிரதமும், 6நாள் (நீரே பருகாமல்) தாகந்தனியா விரதமும் இருந்த பிறகு, விடுதலை செய்யப்பட்டான்

அவன் சிறையிலிருந்த பொழுது திப்பெரரி வாசிகள் அவன்பால் நன்றி செலுத்தி, அவனையே தங்களுடைய குடியரசுக் கட்சியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தனர்.

சமாதான உடன்படிக்கைப்படி பிரிட்டிஷ் பார்லிமென்டால் அங்கீகரிக்கப்பட்ட சுதந்திர ஐரிஷ் ஆட்சி 1922 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி ஏறபடுத்தப்பட்டது. அதன்படி அயர்லாந்துக்கு பிரிட்டிஷ் உறவு இருந்து வந்த போதிலும், ஐரிஷ் பார்லிமென்டான டெயில் ஐரானின் தலைவர் ஈமன் டிவலரா நாளடைவில் அந்த உறவு இல்லாமல் செய்துவிட்டார். அதனால் குடியேற்ற நாடு குடியரசாகிவிட்டது. ஆயினும் தொண்டர்படையினருக்குள் இடையில் ஏற்பட்ட பூசல்களால் என்றும் மறக்கமுடியாத பல கஷ்டங்கள் அயர்லாந்துக்கு ஏற்பட்டன. டப்ளினில் தொண்டர்படைத் தலைமையில் நின்று, எண்ணற்ற வீரத்தியாகங்கள் செய்து போராடிய மைக்கேல் காலின்ஸ் தன்னுடைய பழைய நண்பர்கள் கையாலேயே மடிய நேர்ந்தது! நண்பரை நண்பரே வதைத்தனர். சொத்துக்கள் நெருப்புக்கு இரையாயின. எதிரிகள் கொக்கரித்துக் கொண்டிருந்தனர்!

ஆனால் ஐரிஷ் தலைவர்கள் அரசாங்கத்தை அமைத்ததோடு நில்லாமல், வெகு வேகமாக முற்போக்கான திட்டங்களைக் கையாண்டதால் நிலைமையை மாற்றமுடிந்தது.

ஐரிஷ் தலைவர்களில் முதலாவதாக டி வலராவைக் குறிப்பிடவேண்டும். அவர் கல்வி கேள்விகளிற் சிறந்தவர். 1913லேயே அவர் சுதந்திரப் பட்டாளத்தில் சேர்ந்தவர். 1916ஆம் வருடம் நடந்த ஈஸ்டர் சண்டையில் அவரும் தலைமைவகித்து போராடினார். அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

144