பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


ஆனால் 1917ஆம் ஆண்டு நடந்த சமாதான உடன்படிக்கையின்படி அவர் ஜான் மாதம் 15ஆம் தேதி விடுதலை செய்யப்பெற்றார். அடுத்தவருடம் டப்ளினில் கூடிய குடியரசுச்சட்ட கபைக்கு அவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுபடி அவரை அரசாங்கத்தார் கைது செய்து லிங்கன் சிறையில் அடைத்தனர். அங்கிருந்து அவர்தப்பி வெளிவந்து, அமெரிக்கா சென்று அயர்லாந்துக்கு அரும்பெரும் வேலைகள் செய்தார். கடைசிச் சுதந்திரப் போருக்கு வேண்டிய பணத்தையும் அங்கேயே திரட்டிக்கொண்டார். பின்னால், தாய்நாடு திரும்பி, சுதந்திர நாட்டிற்காக அல்லும் பகலுமாக உழைத்து வந்தார். அவருடைய ஆசைக்கனவுகள் ஒவ்வொன்றாகப் பலித்துவிட்டன. பின்னால் பிரிட்டிஷார் சூழ்ச்சியால், அல்ஸ்டர் மாகாணம் வேறு, அயர்லாந்து வேறு என்று அயர்லாந்து இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டதை மட்டும் அவரால் மாற்றவே முடியவில்லை! அல்ஸ்டர்தான் அயர்லாந்தின் பாகிஸ்தான்.

ஆர்தர் கிரிபித் என்று அரசியல் ஞானியையும் அயர்லாந்தின் விடுதலைப் போரின் வீரச்சரித்திரத்தில் குறிப்பிடவேண்டியது அவசியம். அவர் நடத்திய பத்திரிகைகளும், எழுதிய நூல்களும் மக்களுக்கு வீரத்தை ஊட்டின தாய்மொழியாகிய கெயிலிக் மொழியின் மீது மட்டற்ற அன்பை வளர்த்தன. 1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி அவர் தமது காரியாலயத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் களைப்பினால் இறந்து விழுந்துவிட்டார். அவருடைய கடுமையான உழைப்பே அவரைக் கொன்றுவிட்டது.

இளம் சிங்கம் மைக்கேல் காலின்ஸையும் அயர்லாந்து ஒரு நாளும் மறக்காது. சிரித்த முகமும், செவ்விய உள்ளமும் கொண்டவர். பயம் என்பது அவரைக் கண்டு பயப்படும். ஊர் முழுவதும் அவரைப் பிடிக்கப் போலிஸ்காரர்களும், பட்டாளத்தார்களும் திரியும்பொழுது, அவர் பெரிய வீதிகளின் முனையில் நின்று தொண்டர்களுக்கு வேலைத்திட்டம் வகுத்துக் கொண்டிருப்பார். அவரைப் பிடித்துக் கொடுப்பவருக்கு 10,000 பவுண்டு பரிசலிப்பதாக அதிகாரிகள் கூவிப்பார்த்தார்கள். கடைசிவரை அந்தப் பதினாயிரம் பவுண்டை வாங்க அயர்லாந்திலே ஆள்கிடைக்கவேயில்லை.

இத்தகைய தலைவர்களின் பெருமையாலும் தான்பிரீன், ஸீன் டிரீஸி, லியாம் லிஞ்ச், ஹோகன், மார்ட்டின் லாவேஜ் போன்ற பல்லாயிரம் வீரத் தொண்டர்களின் தியாகத்தாலும் அயர்லாந்து விடுதலை பெற்றது. உலக சரித்திரத்தில் ஒரு பொன் ஏட்டில் எழுதவேண்டிய சரித்திரம். 43 லட்சம் ஐரிஷ் மக்கள் ராட்சத வலிமையுள்ள ஓர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வென்றது விசித்திரமேயாகும்!

சுதந்திர ஜோதியில் அடிமை இருளும், அறியாமை இருளும் அகன்றன: ஒவ்வொருநாளும் ஒரு முன்னேற்றம், பற்பல சீர்திருத்தங்கள் ஐரிஷ் மக்கள் மற்ற நாட்டவரைப்போல், தலைநிமிர்ந்து மிடுக்குடன் வாழுகிறார்கள்

வாழ்க சுதந்திரம்

வாழ்க வையகம்!

145