பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அயர்லாந்து பிரிட்டனுக்கு மேற்கே 50 மைல் தொலைவிலுள்ள ஒரு தீவாகும். அயர்லாந்தில் அல்ஸ்டர் (Ulster), முன்ஸ்டர் (Munster), லீன்ஸ்டர் (Leinster), கொன்னாச் (Connacht) என நான்கு பிராந்தியங்கள் உள்ளன. இன்று இவ் அயர்லாந்து இரண்டு பகுதிகளாகப் பிரிவினை செய்யப்பட்டுள்ளது. ஒன்று அல்ஸ்டர் என்னும் பிராந்தியத்தைக் கொண்ட வட அயர்லாந்தும் மற்றது ஏனைய மூன்று பிராந்தியங்களையும் கொண்ட தென் அயர்லாந்துமாகும். வட அயர்லாந்து பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழுள்ள ஒரு பகுதியாகவும், தென் அயர்லாந்து, அயர்லாந்துக் குடியரசாகவும் இன்று அமைந்துள்ளன. அயர்லாந்துக் குடியரசின் பரப்பளவு 26,600 சதுரமைலாகும். மக்கள் தொகை 30,00,000 ஆகும். (1971ஆம் ஆண்டுக்கணிப்பீடு). வட அயர்லாந்தின் பரப்பளவு 5,462 சதுர மைல், சனத்தொகை 15,00,000 ஆகும். 1922 ஆம் ஆண்டு தென் அயர்லாந்து பிரிட்டிஷ் முடியாட்சிக்குக் கீழான சுதந்திர அரசு (Irish Free State) என்ற உரிமையைப் பெற்றது. பின்பு இது 1948ஆம் ஆண்டு குடியரசாகியது. ஆனால் வட அயர்லாந்து ஆங்கில ஆதிக்கத்தின்கீழ் ஒரு மாகாணமாகத் தொடர்ந்தும் இருந்து வருகின்றது.

இனி அதன் வரலாற்றைச்சற்று நோக்குவோம். கி.பி. 1166 ஆம் ஆண்டு ஆங்கிலோ - நார்மன்ஸினர் அயர்லாந்தின் மீது படையெடுத்தனர். 1170ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் இரண்டாம் ஹென்றியின் ஆதிக்கத்தின் கீழ் அயர்லாந்து கொண்டு வரப்பட்டது. கடலரசியென்றும், உலக வல்லரசென்றும், சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியமென்றும் நாம் கேள்விப்பட்ட ஆங்கில நாட்டை எதிர்த்து அயர்லாந்து மக்கள் தாம் கைப்பற்றப்பட்ட காலத்திலிருந்தே தொடர்ந்து போராடிவந்தனர். காலத்துக்குக் காலம் சில கட்டங்களில் போராட்டம் உக்கிரமடைந்தும், சில கட்டங்களிற் தொய்வடைந்தும் வந்துள்ளது. இப்போராட்டத்தில் மிதவாதம், சமரசம், ஆட்சியாளரோடு கூட்டுச்சேர்வு, காட்டிக் கொடுப்பு, இயக்கங்களிடையேயான முரண்பாடு போன்ற பல அம்சங்கள் இருந்தன. இவற்றால் ஸ்தம்பிதங்கள் ஏற்பட்டபோதிலும் இவற்றையும் மீறி வரலாறு முன்னேறத்தான் செய்தது.

இங்கிலாந்து ஒரு பெரும் வல்லரசாக வளர்ச்சி அடைவதற்கு அயர்லாந்தை முழுமையாக இங்கிலாந்தின் பிடிக்குள் வைத்திருக்க வேண்டியது, புவியியல் இட அமைவு, யுத்தம் கேந்திரம் என்பன பொறுத்தும், இங்கிலாந்திற்குத் தேவையான உணவுப்பண்ட உற்பத்தி பொறுத்தும் அவசியமாயிருந்தது. மேலும் பிற்காலத்தில் இங்கிலாந்தின் தொழிலுற்பத்திப் பொருட்களுக்கான சந்தையாகவும் அயர்லாந்தைத் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதற்கான சகல முயற்சிகளையும் இங்கிலாந்து தொடக்கத்திலிருந்தே கையாண்டு வந்தது.

14