பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கைப்பற்றப்பட்ட காலத்திலிருந்தே ஆட்சியாளர் மேற்கொண்ட நடவடிக்கைகளையும், மக்கள் மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகளையும், இங்கு சுருக்கமாகப் பொதுமைப்படுத்தி நோக்குதல் பொருத்தமானதாகும். கைப்பற்றிய ஆரம்ப காலத்தில் ஆங்கிலோ-நார்மன் படையினர் சூறையாடல்களில் ஈடுபட்டனர். இப்படைகளை எதிர்த்து மக்கள் ஆங்காங்கே தம்மாலியன்ற போராட்டங்களைச் செய்தனர். அணியணியாகக் குதிரைகளிற் செல்லும் இராணுவத்தினை பதுங்கியிருந்து மக்கள் கொலைசெய்வதில் ஈடுபட்டனர். இராணுவம் தனக்குத் தேவையான தானியங்களைச் சூறையாடிவிட்டு மிகுதியான தானியங்களுக்கும், பயிருக்கும், குடிசைகளிற்கும் தீவைப்பதுண்டு. இதனால் மக்கள் இராணுவத்தினரின் கையிற் தானியங்கள் அகப்படாதிருப்பதற்காகத் தமது தானியத்திற்கும் பயிருக்கும் தாமே தீவைப்பதுமுண்டு. மக்கள் பலவேளைகளில் இராணுவத்தை உணவின்றி இறக்க வைத்திருக்கிறார்கள். மக்களும் பஞ்சத்தால் இறந்திருக்கிறார்கள்.

அயர்லாந்தை தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதற்குக் குடியேற்றங்களை ஸ்தாபிப்பதே சிறந்த வழியென ஆட்சியாளர் எண்ணி கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிற் குடியேற்றங்களை ஸ்தாபிக்க முற்பட்டனர். ஒரு மக்கள் கூட்டத்தின் தேசியத் தன்மையை அழித்தொழிப்பதற்கும் போராட்டங்கள் எழவிடாது ஊடறுப்பதற்கும் ஒரு சிறந்த வழியாக குடியேற்ற முறைமை அமைந்துள்ளதென்பது தெளிவாகும். அரசியற் சிந்தனையாளர் மாக்கியவல்லி என்பவர் குடியேற்றம் சம்பந்தமாகக் குறிப்பிட்ட கருத்தினை இங்கு நோக்குதல் பொருத்தமாகும். "அரசன், தான் கைப்பற்றிய பகுதியைத் தனது ஆதிக்கத்தின் கீழ் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமாயின் அங்கு தனது குடியேற்றங்களை ஸ்தாபிப்பது, இராணுவ முகாம்களை ஸ்தாபிப்பதைவிட மேலானதாகும். ஏனெனில் இராணுவத்துக்கு அரசனே ஊதியம் கொடுக்க வேண்டும்; அதே வேளை இராணுவத்தினர் அந்த மண்ணுக்கு பரிச்சயமானவர்களல்ல; ஆனால் குடியேற்றம் அவ்வாறில்லை. அவர்கள் அந்த மண்ணுக்குப் பரிச்சயமாகிவிடுவார்கள். அவர்களுக்கு அரசன் ஊதியம் கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் கூலிக்காக மாரடிப்பவர்களாகவன்றி சந்ததி சந்ததியாக தமது உயிர் வாழ்விற்காக உணர்ச்சியோடு நின்று தாக்குப்பிடிக்கக் கூடியவர்கள். எனவே குடியேற்றம் இராணுவத்தைவிட மேலான நிரந்தர இராணுவமாகும்“ என்று குறிப்பிட்டார். இந்த வகையில் குடியேற்றமென்பது கைப்பற்றப்பட்ட மக்கள் பொறுத்து மிகவும் அபாயகரமானதென்பது உண்மையாகும். பொதுவாக உலகிலுள்ள படையெடுப்பாளர்கள் அனைவரும் குடியேற்றங்களை ஸ்தாபிப்பதில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளார்கள். அவ்வகையில் இங்கிலாந்தும் அயர்லாந்திற் குடியேற்றங்களைத் ஸ்தாபிக்க முற்பட்டது.

15