பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதேவேளை இன்றியமையாதவற்றை பூர்சுவா வர்க்கத்தினர் கைவிடாது தம்வசமே வைத்துக்கொள்வர்.“ என்று குறிப்பிட்டார்.

இங்கு லெனின் சுட்டிக்காட்டிய இந்த இரண்டாவது வழிமுறை மிகவும் ஆபத்தானது. இது மாயாஜால வலைகளை விரித்துப் பல மூடுமந்திரங்களைக் கொண்டிருக்கும். போராட்டத்தின் கூர்மையைத் தனிப்பதிலும், மக்களை ஏமாற்றுவதிலும் இம்முறை கணிசமானளவு வெற்றிகளை ஈட்டுவது. எனவே, பூர்சுவாக்களின் இந்தக் கபடத்தனமான சூழ்ச்சியை உடைப்பதில், அவற்றைக் குழப்புவதில் கெரில்லாப் போர்முறை ஒரு பலம் பொருந்திய மார்க்கமாய் உள்ளது. இந்த வகையில் அயர்லாந்தில் ஆங்கில ஆதிக்கத்திற்கெதிராக தான்பிரீன் மேற்கொண்ட கெரில்லா நடவடிக்கைகள் ஆங்கிலேயரின் சூழ்ச்சிகளையும், சமரசங்களையும் குழப்புவதில் ஒரு பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளது. அதாவது 1900 ஆம் ஆண்டுகளின் ஆரம்பம் வரை ஆங்கிலேயர், ஐரிஷ் மிதவாதத் தலைவர்களையும், ஐரிஷ் மக்களையும் தொடர்ந்து காலம் கடத்தல் நடவடிக்கைகள் மூலம் ஏமாற்றி வந்தனர். இந்த நிலையில் விரக்தியுற்ற இளைஞர், ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் தீவிரமாய் ஈடுபடத் தொடங்கினர். அந்த வகையில் 1913 ஆம் ஆண்டு தொடங்கிய ஆயுதம் தாங்கிய இயக்கமே ஐரிஷ் தொண்டர்படை (Irish Volunteers). இதனை அடியொட்டி ஐரிஷ் குடியரசு இராணுவம் (Irish Republican Army - IRA) மலர்ந்தது.

இவ்வாறு 1913ஆம் ஆண்டு தோன்றிய அயர்லாந்துத் தொண்டர்படையில் 1911ஆம் ஆண்டு தான்பிரீன் ஓர் உறுப்பினராகச் சேர்த்து கொண்டார். தொடர்ந்தும் காலம் கடத்தி ஏமாற்ற முடியாதென்ற அளவிற்குப் போராட்டம் வெடித்து வந்ததும் ஆங்கில ஆட்சியாளர் சில விட்டுக் கொடுப்பு ஏமாற்றுதல்களைச் செய்ய முன்வந்தனர். அந்தவகையில்தான் 1914ஆம் ஆண்டு சுயாட்சிச் சட்டம் (Home Rule Act) நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா 1886ஆம் ஆண்டு முதல் முறையாக ஆங்கில ஆட்சியாளரால் பொதுமக்கள் சபையிற் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் 1914 ஆம் ஆண்டுவரை நிறைவேற்றாது காலம் கடத்தி வந்தனர் என்பது குறிப்படத்தக்கது. இந்த ஏமாற்றை ஏற்று ஐரிஷ் மிதவாதத்தலைவர்களும் பின்செல்லத் தொடங்கினர். காரணம் இச்சட்டத்தில் அவர்களுக்குச் சில எலும்புத்துண்டுகள் கிடைத்தமையாகும். எனவே இந்த ஏமாற்றையும், சமரசத்தையும், மிதவாதத்தையும் உடைத்து நீறு பூத்த நெருப்பாய் உள்ளே மறைந்திருக்கும் பிரச்சனையின் நீறைத் தட்டி நெருப்பை வெளிக்காட்டவேண்டியது ஒரு தலையாய பணியேயாகும். இந்த வகையில் தான்பிரீன் இந்தச் சமரசங்களையும், மாயாஜாலங்களையும் உடைத்துப் பிரச்சினையை எரிநிலைக்குக் கொண்டு வர கெரில்லா நடவடிக்கைகள் மூலம் பெரும்பணியாற்றினார்.

23