பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


பேச்சு ஒருபுறமிருக்க யாவருடைய உள்ளமும் ஒரு விஷயத்தில் ஈடுபட்டிருந்ததாகக் காணப்படவில்லை. இவர்களிற் சிலர் அடிக்கடி தங்கள் கைக்கடிகாரங்களில் நேரத்தைப் பார்த்தனர். வெளியில் வீதிகள் கூடுமிடத்தில் கண்னோட்டஞ் செலுத்திபோகிறவர்களையும் வருகிறவர்களையும் நுட்பமாய்க் கவனித்தனர். முதலாவதாக டப்ளின் நகரப் போலீஸ்காரன் ஒருவன் தனது பருத்த உடலைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு பீனிக்ஸ் தோட்ட வாயிலிருந்து வெளியே வந்தான். அவன் உருவம் பார்க்கத்தக்கதுதான் திண்ணமான சரீரம். ஈட்டிபோல் ஆகாயத்தில் துருத்திக்கொண்டிருந்த முனையுள்ள தொப்பி. பளபளவென்று ஒளிவிடும் பொத்தான்கள். மாசுமறுவற்ற பூட்ஸ். இடுப்பிலே ரிவால்வர். இத்தனையும் சேர்த்து ஒன்றாய்க் கருதிப் பார்த்தால் தெரியக்கூடிய உருவந்தான் அந்தப் போலீஸ் வீரன். அவன் வீதியில் நின்றுகொண்டு யாரையும் நடமாடவிடாமல் தடுத்துக் கொண்டிருந்ததால், யாரோ ஒரு பெரிய அதிகாரி அங்கு வருவதற்கு ஏற்பாடு நடப்பதாகத் தோன்றியது.

ஆம்! அன்று ஒரு பெரிய அதிகாரி அங்கு விஜயம் செய்வதாக இருந்தார். அவர்தான் அயர்லாந்தின் வைசிராய். அவர் அயர்லாந்திலிருந்து தமது தலை நகருக்கு அப்பொழுது விஜயஞ்செய்ய ஏற்பாடாயிருந்தது. இந்த ஏற்பாடு பொது ஜனங்களுக்கும் இதர அதிகாரிகளுக்கும் பல ரகசியப் போலீஸாருக்குமே தெரியாது. வைசிராயின் மெய்க்காப்பாளர் எவர் எவருக்குத் தெரியவேண்டியது அவசியமோ அவர்களுக்கு மட்டும் அவரது வருகை கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. வைசிராயின் விஜயம் இத்தனை ரகசியமாக்கப்பட்டது ஏன்? ஏனெனில் காலநிலை அப்படி இருந்தது. அயர்லாந்து முழுவதும் ஆங்கிலேயர் மீதான துவேஷம் உச்சநிலையைடைந்திருந்தது. புரட்சிக்காரர்கள் போலிஸ் அதிகாரிகளை எங்கு கண்டாலும் சுட்டுத்தள்ளி வந்தனர். சாதாரண வெள்ளையர்களில் இவ்வளவு வன்மம் செலுத்தி வந்தவர்கள் அவர்கள். அயர்லாந்தின் அரசாங்கத் தலைவரான வைசிராயின் மீது அது தப்பமுடியுமா? அப்பொழுதிருந்த வைசிராய் அயர்லாந்தில் பிறந்தவராயினும் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்காகவே உழைத்தவர். தாம் புறப்படும் நேரத்தையும் செல்லும் பாதையையும் முன்கூட்டித் தெரிவிப்பார். கடைசி வேளையில் எல்லாம்வற்றையும் மாற்றி விடுவார். ரயிலில் போவதாகச் சொல்லி மோட்டாரில் போய்விடுவார். பல வேஷங்கள் தரித்துப் பிறர் அறியமுடியாமல் செல்வார். ரஷ்யச் சக்கரவர்த்தியான ஜார் அரசன் இதுபோல்தான் செய்வது வழக்கமாம். ஜாருக்கு நாடெங்கும் பகை. பிரஜைகள் எல்லோரும் விரோதிகள். அவன் உயிரை யார் எந்த நேரத்தில் பழிவாங்குவார் என்பது நிச்சயமில்லாமல் இருந்தது. அதுபோலவே அயர்லாந்து ஜனங்கள் தங்கள் தேசத்தில் ஏற்பட்டிருந்த ஆங்கில அரசாங்கத்தைப் பகைத்து வெளிப்படையாகக் கலகஞ் செய்யக் கிளம்பிவிட்டதால் லார்ட் பிரெஞ்ச் (அதுதான் வைசிராயின் பெயர்) மிகுந்த கவனத்துடன் நடமாடவேண்டிய அவசியம் நேர்ந்தது. அவர் வருகை மிகவும் அந்தரங்கமாக வைக்கப்பட்டிருந்த போதிலும், அது சம்பந்தமான இடம் காலம் முதலியவை எவர்களுக்

27