பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


வதுபோல் நாலு பக்கத்திலும் குண்டுகள் விழுகின்றன. காது செவிடுபடும்படியான ஓசை. இரத்த வெள்ளத்திலே ஒரு வாலிபன் மிதந்து கொண்டிருக்கிறான். சில நிமிஷங்களில் அவன் அந்தமில்லாத உறக்கத்தில் ஆழ்ந்து போகின்றான். இடையில் 'தோழா போரை விடாது நடத்துங்கள் என்று மெல்லக் கர்ஜிக்கிறான். இந்தக் காட்சியை யாரால் மறக்கமுடியும். இருபத்தொரு வயதான இளஞ்செல்வன் ஸாவேஜ் தேசத்திற்கு உழைக்கவே ஜன்மமெடுத்ததாகக் கருதி, தேசத்திற்காக உயிர்பலி கொடுக்க முன்வந்தவன், மூன்று வருடங்கள் அரும் போராட்டங்கள் செய்துவிட்டு இப்பொழுது மார்பிலே குண்டு தாங்கி வீழ்ந்துவிட்டான்.

இறந்த தோழனுக்கு அனுதாபம் காட்டி நிற்கவேண்டிய நேரம் அதுவன்று. ஆதலால் தான்பிரீன் மறுபடியும் போராடச் சென்றான். அவனுடைய காலிலிருந்து ரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. எவ்விடத்தில் தப்பி நின்று போராடலாம் என்று பார்த்தால் எங்கும் வழி காணப்படவில்லை. எனினும் தைரியத்தைக் கைவிடாது அவன் கெல்லியின் விடுதிக்குப் பின்னால் சென்று அங்கிருந்து சுட ஆரம்பித்தான். அவனுடைய நண்பர்களிடம் வெடிகுண்டுகள் தீர்ந்துபோயின. சிலருடைய ரிவால்வர்களில் குண்டுகளில்லை. ஆனால், எதிரிகளிடமிருந்தும் குண்டுவரக் காணோம். ஆங்கிலத் துருப்புகள் பீனிக்ஸ் தோட்டத்தைப் பாதுகாக்க விரைந்தோடிவிட்டன.

அவ்வளவு நேரம் நடந்த போராட்ட முடிவில் களத்தில் உடைந்து சிதறிப்போன இரண்டாவது மோட்டார் வண்டியும் அதை ஒட்டுபவனான மாக்இவாய் என்றவனும், முதல் முதலில் குண்டுபட்ட போலிஸ்காரன் ஒருவனும் இறந்துபோன மார்ட்டின் லாவேஜின் உடலுமே தான்பிரீன் கூட்டத்தார் கையில் சிக்கிய பொருள்கள். டிரைவருக்கு மிகுந்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவனை அவர்கள் விடுதலை செய்து விட்டார்கள்.

தான்பிரீனும் தோழர்களும் வைசிராயைச் சுட்டுத்தீர்த்து விட்டதாக உறுதியுடன் நம்பினர். அவரைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியாத முறையில், வைசிராப் பலருக்கு மத்தியிலே மாறுவேஷத்துடன் இருந்தார். இறந்தவர் யார் யாரென்றும், விலக்கப்பட்டவர்கள் விவரம் என்ன என்றும் தெரியவில்லை, போராட்டம் முடிந்தவுடனே தான்பிரீன் கூட்டத்தார் ஒரு விநாடியும் விண்போக்காது நகருக்குள் சென்றுவிட வேண்டும் என்று கருதினர். ஏனென்றால் சில நிமிஷ நேரத்தில் அங்கு பல்லாயிரம் பட்டாளங்கள் வந்துவிடும். எங்கும் லார்ட்பிரெஞ்ச்சுடப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவிநிற்கும். எனவே அவர்கள் சைக்கிள் வண்டிகளில் ஏறிக்கொண்டு ஆஷ்டவுனை விட்டு வெகு வேகமாய் வெளியேறினர். ஸாவேஜ் களப்பலியாக களத்திலே விடப்பட்டான். அவன் உடல் கெல்லியின் விடுதியில் வைக்கப்பட்டது. தோழர்கள் புறப்படு முன்னால் அவனுடைய ஆன்மா சாந்தியடையும்படி பிரார்த்தித்தனர். அதுவே அந்தப் போர் வீரனுக்குத் தோழர்கள் செலுத்திய கடைசி மரியாதை.

31