ப. ராமஸ்வாமி
காலத்திற்குத் தொண்டர்களிடையே குழப்பமும் அயர்வுமே காணப்பட்டன. ஆனால் ஈஸ்டர் கலகத்தில் சம்பந்தப்பட்டுப் போராடிய தொண்டர்கள் பலர் ஆங்கில ராணுவத்தார் வலையில் அகப்படாது தப்பி, தொண்டர் படையைச் சீர்திருத்தி அமைப்பதற்காக டப்ளின் நகரில் இரண்டு ரகசிய மகாநாடுகளை நடத்தினர். சில வாரங்களில் மீண்டும் தீவிரமான வேலை ஆரம்பமாயிற்று. தம்பிரீனும் அவனுடைய தோழர் ஸின்டிரீஸியும் தங்களுடைய தொண்டர் படையைச் சீர்திருத்தி அமைக்க முயன்றார்கள். எக்காரியத்தையும் ரகசியமாகவே செய்யவேண்டியிருந்தது. வாரத்திற்கு இருமுறை அவர்கள் ஒரு சிறிய வனத்தில் கூடிப் பயிற்சி செய்வது வழக்கம். இவ்வாறு 1917ஆம் ஆண்டு மே மாதம் வரையில் நடந்து வந்தது. அப்பொழுது தான்பிரீனுடைய படையில் 13 பேர்கள் இருந்தார்கள். அவர்களில் யாருக்கும் போர்முறைகளைப் பற்றித் தெரியாது. வேறு ராணுவப் பயிற்சி உள்ளவர்கள் ஆங்கிலப் பட்டாளத்தில் சேர்ந்து கொண்டிருந்ததாலும் கண்டவர்களையெல்லாம் நம்புவது அபாயமானதாலும் அவர்களது ராணுவப்பயிற்சி முற்போக்கு அடையமுடியவில்லை. எனினும், தேகப்பயிற்சி செய்தல், கொடி, குழல் ஊதுதல் முதலியற்றால் அடையாளங்களைக் கற்றுக் கொள்ளுதல், ரிவால்வரால் குறிபார்த்துச் சுடுதல் முதலியவற்றில் அவர்கள் விசேஷப் பழக்கம் பெற்று வந்தனர். இவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள அவர்களுக்குப் புத்தகங்களைத் தவிர வேறு உதவியில்லை. அந்தப் புத்தகங்களும் அரசாங்கத்தாரால் ஆங்கிலத்துருப்புகளுக்கும் கொடுக்கப்பட்டவை. அவர்களை எதிர்ப்பதற்கு அவர்களுடைய புத்தகங்களே உதவிபுரிந்தன. தான்பிரீன் கூட்டத்தார் பிரிட்டிஷ் துருப்புக்கள் பயிற்சி செய்யும் இடங்களுக்கு அடிக்கடி சென்று கவனிப்பது வழக்கம். அதன் மூலம் அவர்கள் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள். அத்துடன் எங்காவது, யாரிடமாவது ஒரு ரிவால்வர் கிடைக்குமென்று அவர்கள் கேள்விப்பட்டால் என்ன விலை கொடுத்தாவது அதை வாங்கி விடுவது வழக்கம். அந்த நேரத்தில் தேவையுள்ள பணமும் எப்படியாவது கிடைத்துவிடும்.
1917 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், தான்பிரீன் படையினர் நகரெங்கும் தெரியும்படியாக அணிவகுத்துச் சென்றனர். அக்காலத்தில் ஈஸ்டர் கலக சம்பந்தமாக நாடுகடத்தப்பட்ட பலர் அயர்லாந்திற்கு மீண்டும் வந்து வாலிபர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தனர். அரசியல் விவகாரங்களிலும் குடியரசுக்காரர்களுக்குச் செல்வாக்கு அதிகரித்து வந்தது. குடியரசின் பெயரால் நின்ற இாண்டு அபேட்சகர்களுக்குத் தேர்தலில் வெற்றி கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்னால் லியூஸ் சிறையிலிருந்து விடுதலையடைந்த ஈமன் டி வெலசாவும் குடியரசுக் கட்சியின் சார்பாகப் பார்லிமெண்டின் ஸ்தாபனம் ஒன்றுக்கு அபேட்சகராக நின்றார். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆங்கிலப் பார்லிமென்டிற்கே செல்வதில்லை என்று உறுதி கூறினார். அவருக்கு மகத்தான வெற்றி ஏற்பட்டது. தேர்தலுக்குப் பின்னர் அவர் திப்பெரரி நகரில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரசங்கம் செய்தார். அப்பொழுது தான்பிரீன் படையினர்