பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதற்பதிப்பிற்கான
முன்னுரை


ஒரு நாட்டின் சுதந்திரப்போரை நடத்துவதற்கு ஈடுபடுபவர்கள் மட்டும் இருந்தால் போதாது. சுதந்திரத்தைப் பற்றி ஆனந்தக் கனவுகள் கண்டு வீரக் கவிதை பாடக்கூடிய புலவர்கள் வேண்டும்; அறிவாளிகள் வேண்டும்; தீர்க்க தரிசிகள் வேண்டும். உணர்ச்சியற்றுக் கிடக்கும் உயிர்ப்பிண்டங்களை உருவாக்கி உயிரூட்டக்கூடிய ஆசிரியர்களும் பத்திரிகைகளும் நூல்களும் வேண்டும். மலைபெயர்ந்தாலும் நிலை பெயராத தீரர்கள் வேண்டும். அயர்லாந்து அதையும் பெற்றிருந்தது. ஐரிஷ் மொழியைப் புதுப்பித்து அரியாசனத்தில் அமர்த்துவதற்குத் திறமையுள்ள புலவர்கள் சிலர் முன்வந்தனர். தொழிலாளிகளையும் குடியானவரையும் பிரபுகளையும் ஒன்று சேர்த்து வெறியூட்டி ஆட்டுவிப்பதற்கு ஆர்தர் கிரிபித், பார்ணல், மைக்கேல் காலின்ஸ், சமன்டி வெலா. தான்பீரின், டெரன்ஸ் முதலிய ராஜதந்திரிகளும் அறிஞர்களும் வீரர்களும் முன்வந்து உழைத்தனர். இவர்களுடைய உழைப்பாலும் மக்களின் ஒத்துழைப்பாலும் 300 ஆண்டு அடிமைத் தளை உடைந்து, சிதறிப் பொடிப் பொடியாகப் பறந்து போயின.

அயர்லாந்து புரிந்த அரும் போரின் அடிப்படைத் தத்துவங்களைப் பற்றிக் தலைவர் டிவெலரா பலமுறையாக எடுத்துக் கூறியிருக்கிறார். அவருடைய வாக்கியங்களில் சிலவற்றைக் கவனித்தாலே உண்மை எளிதில் புலப்படும்.