பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


தேர்தலில் மக்களுக்கு ஸின்பீன் வெறி பிடித்துவிட்டதென்றே சொல்லலாம். பாதிரிமார்களிற் பலர் அதில் சேர்ந்து கொண்டனர். ஸின்பின் கொள்கைகள் காட்டுத் தீப்போல் நாடெங்கும் பரவின. நாட்டிலும் நகரத்திலும் எங்கு பார்த்தாலும் திறமையுள்ள சொற்பொழிவாளர்கள் மேடைகளில் மக்களுடைய கடைமையைப் பற்றிப் பல்லாயிரம் பிரசங்கங்கள் செய்து வந்தார்கள். எங்கும் உற்சாகத்திற்கும் உழைப்பிற்கும் குறைவேயில்லை. தேர்தலில் ஏற்பட்ட உற்சாகத்தினால் ஐரிஷ் தொண்டர்படையின் தொகை குறைய ஆரம்பித்தது. பலர் அதிலிருந்து பிரிந்துவிட்டனர். ஆனால் எஞ்சி நின்றவர்கள், தேர்தலுக்குப் பின்னால் படையை மீண்டும் திறம்பட அமைத்துக் கொள்ளலாம் என்று கருதி தேர்தலில் தீவிரமாக இறங்கி உழைத்தார்கள். எல்லோரும் குடியரசு அபேட்ககர்களுக்காகப் பிரசாரம் செய்தனர். நாட்டில் ஒரு வீடு, சுவர், மரம் பாக்கியில்லாது விளம்பரங்கள் ஒட்டப்பட்டன. அறிக்கைகள் எழுதப்பட்டன. எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும், 'குடியரசுக்கே வாக்களியுங்கள்' 'ஸின்பீனையே ஆதரியுங்கள்!' 1916 ஆம் வருடத்திய வீரரை மறவாதீர் என்ற விளம்பரங்களே காணப்பட்டன. குடியரசை ஆதரிப்பவர்கள் வெற்றி பெற்றால், பார்லிமென்டுக்குச் சென்று பதவி ஏற்பதில்லை என்றும், அயர்லாந்திலேயே தங்கித் தனிக் குடியரசை அமைத்து உழைப்பர் என்றும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. மக்களும் அத்திட்டத்தில் மோகங்கொண்டுவிட்டனர்.

பொதுத் தேர்தலில் உழைத்த பல வாலிப வீரர்களும் வேறு பல காரணங்களுக்காகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டும் உள்நாட்டுக் கலகத்தில் சுடப்பட்டும் இறந்துபோயினர். அவர்களுடைய சுயநலமற்ற உழைப்பினாலேயே அயர்லாந்து முன்னேறிச்செல்லமுடிந்தது. தேர்தலில் குடியரசுக்காக நின்ற லின்பீனர்களுக்குப் பெரியதோர் வெற்றி கிடைத்தது. 'பிரிட்டிஷ் ஆட்சி வேண்டாம், ஐரிஷ் குடியரசையே ஆதரிப்போம்' என்று கூறியவர்களுக்கே வெற்றி கிடைத்தது. மொத்தம் நூற்றைந்து ஸ்தானங்களில் எழுபத்திமூன்றுக்குக் குடியரசுக்காரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தப் பிரதிநிதிகள் 1919ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி டப்ளின் நகரில்கூடி அயர்லாந்து குடியரசாதிவிட்டது, என்று உலகறியப் பிரகடனப்படுத்தினார்கள். அத்துடன் புதிய தேசிய அரசாங்கத்தையும் அமைத்துக்கொண்டார்கள். இவ்வாறு கூடிய எழுபத்திமூவர் கூட்டமே டெயில் ஜரான் என்ற ஐரிஷ் பார்லிமென்டு. இதற்கும் ஆங்கில அரசாங்கத்திற்கும் சம்பந்தமில்லை. டெயில் ஜரான் அயர்லாந்தை ஆள்வதற்குத் தனக்கே உரிமை உண்டென்று கூறிவிட்டது. இந்த நேரத்தில் தான்பிரீனும் தோழர்களும் தங்கள் நகருக்கு அருகில் இருந்த லோலோஹெட்பக் என்னுமிடத்தில் தங்களுக்குத் தெரிந்த முறையில் ஒரு போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அது ஆங்கில அதிகாரத்தைக் கிள்ளி எறிந்துவிடத் தக்கதாயிருந்ததது. நாட்டில் வாலிபர்கள் தயாராயிருக்கும் பொழுது அவர்களுக்கு ஒரு வழியைக் காட்டிவிட்டால் பின் காரியங்களை

54