பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


டால் சந்தேகங்கொளவர். சந்தேகம் சத்துருக்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடும் ஆதலால் அங்கு காத்திருந்தவர்கள், அதிகாலையில் பொழுது விடியுமுன்பே வந்து புதர்களுக்குப் பின்னால் மறைந்து கொள்வது வழக்கம். எந்த நேரத்திலும் ஆயுதங்களைக் கைகளில் வைத்துக்கொண்டு பகைவரின் வரவை அவர்கள் எதிர்நோக்கிக் கொண்டெயிருந்தனர். இரண்டு மணிக்குப் பின்பு போலிஸார் வரமாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில் போலிஸார் அங்கிருந்து நகரத்திற்கு இருட்டு முன்பே திரும்பவேண்டியிருக்கும். இரண்டு மணிக்குப் பின் தான்பிரீன் தோழர்களுடன் தன்வீட்டுக்குச் சென்றுவிடுவான். வீட்டில் அவனுடைய அன்னை யாவருக்கும் உணவு சமைத்துப் போடுவது வழக்கம். அதிகாலையில் நான்கு மணிக்கே காலை ஆகாரம் தயாரித்துக் கொடுத்து, அவள் அவர்களை வழியனுப்புவாள். ஆறாவது நாள் காலையில் அவள் காலை உணவு கொடுக்கும் பொழுது 'இன்று காரியத்தை முடிக்காமல் வந்தீர்களானால் நாளை முதல் நான் உங்களுக்குச்சோறு படைப்பது சந்தேகம்தான்!' என்று எச்சரிக்கை செய்தனுப்பினான்.

கடைசியாக ஜனவரி 21ஆம் தேதி வந்து சேர்ந்தது. அன்றைய தினம் அயர்லாந்தின் சரித்திரத்தில் மிக விசேஷமானதாகும். சர்வ வல்லமையுள்ள பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து அயர்லாந்து விடுபட்டுத் தனது உயிரினும் இனிய குடியரசை அன்றுதான் ஸ்தாபித்துக் கொண்டது. டப்ளினின் டெயில் ஐரான் ஏற்பட்டதும் அன்றுதான். உலகத்திலுள்ள சகல சுதந்திர நாடுகளுக்கும் அயர்லாந்து யாருக்கும் அடிமையில்லை என்று அறிவிக்கப்பட்டது. அந்தத் தினத்நில் தான்பிரீன் கூட்டத்தார் ஸோலோஹெட்பக் புதர்களில் பகைவரை எதிர்பார்த்து வெகு நேரம் காத்திருந்தனர். அவர்கள் அனுப்பியிருந்த தூதுவன் கிளை வீதியில் நடமாடிக்கொண்டு திப்பெரரி வீதியில் வண்டி வருகின்றதா என்று திகுந்த கவனத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் திடீரென்று ஓடிவந்து சுடர்விடும் கண்களுடன் 'ஆசாமிகள் வந்துவிட்டனர். வந்து விட்டனர், என்று கூவினான்.

உடனே ஒவ்வொருவனும் முன்னரே குறித்தபடி தனது இடத்திற்குச் சென்று தயாராய் நின்றான். அவர்களில் யாருக்காவது கூச்சமோ அதிர்ச்சியோ ஏற்பட்டிருந்தாலும் ஒருவரும் அதை வெளிக்காட்டவில்லை. மின்னல் பாய்வது போல் ஒவ்வொரும் விரைந்து சென்று கடமையில் ஈடுபட்டனர். வெகுசீக்கிரத்தில் போராட்டத்தில் அவர்களுக்கு வாழ்வு அல்லது மரணம் ஏற்படக் காத்திருந்தது. தூதன் மீண்டும் ஓடிவந்து வருகிறவர்களுடைய எண்ணிக்கையையும் நெருங்கி எவ்வளவு தொலைவில் வருகிறார்கள் என்பதையும் அறிவித்தான். வண்டி நெருங்கி வந்துகொண்டிருந்தது. சக்கரங்கள் வீதியில் 'சடசட' வென்று உருளும் ஓசை கேட்டது. குதிரைக் குளம்புகளின் ஓசையும் கேட்டது.

தான்பிரீன் பரபரபடைந்தான். மிகவும் அமைதியுடன் நிற்க வேண்டுமென்று விரும்பினாலும் அது மிகக் கஷ்டமாயிருந்தது. கூடியவரை ஆத்தி

58