பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


ரத்தை அடக்கிக்கொண்டு, புதரை விலக்கிவெளியே வீதியில் எட்டிப்பார்த்தான். குதிரை வண்டி வெகுசமீபத்தில் வந்துவிட்டது. குதிரையின் இரண்டு பக்கத்திலும் இருவர் வந்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் வண்டிக்காரன். மற்றவன் ஒரு 'முனிசிப்பல்' வேலைக்காரன். வண்டிக்குப்பின்னால் சிறிது தூரத்தில் ஆயுதந்தாங்கிய இரண்டு போலிஸாரும் வந்துகொண்டிருந்தனர்.

போலிஸார் வெகுசமீபத்தில் வந்தவுடன் புதரில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் ஒரே தொனியில் 'தூக்குங்கள் கைகளை' என்று உரக்கக் கூவினார்கள். ஆனால் போலிஸார் இருவரும் கைகளைத்துக்குவதாகக் காணப்படவில்லை. தான்பிரீன் முதலியோர் அவர்களை வீணாகக் கொன்றுதள்ள மனமின்றி, மீண்டும், 'தூக்குங்கள் கைகளை!' என்று உத்தரவிட்டனர். போலிஸார், கைகளைத் தூக்குவதற்குப் பதிலாக, யுத்த வீரர்களைப் போல், துப்பாக்கிகளைக் கையில் பிடித்துச் சுடுவதற்குக் குறிபார்த்தனர். அவர்களும் ஐரிஷ்காரர்கள் அல்லவா! மரியாதையாகப் போலிஸார் துப்பாக்கிகளைத் துார எறிந்திருந்ததால், உயிர்ப் பிச்சை பெற்றிருப்பார்கள். அந்நிய அரசாங்கத்திடம் வாங்கிய கூலிக்காக அவர்கள் உயிரை விடத் துணிந்து நின்றனர்; ஒரு நிமிஷம் தாமதித்திருந்திருந்தால் புரட்சிக்காரர்கள் மடிந்திருப்பார்கள். ஆதலால் அவர்கள் கண்கொட்டு முன்னால் போலிஸாரைக் குறிவைத்துத் துப்பாக்கி விசைகளை இழுத்துவிட்டனர். குண்டுகள் ஏக காலத்தில் குறிதவறாமல் பாய்ந்தன. இரண்டு போலிஸாரும் மூச்சற்றுக் கீழே சாய்ந்தனர். ஐரிஷ் தேசிய வீரர்கள் தங்களுடன் பிறந்த ஐரிஷ் சகோதரர்களை வீழ்த்திவிட்டனர்!

59