உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


மெல்லாம் சுற்றித்திரிந்தனர். வட்டங்கள் சுற்றினர். வழி தெரியாமல் திகைத்தனர். இடையில் ஸீன் டிரீஸீ இருபதடி ஆழமுள்ள ஓர் ஓடையில் வீழ்ந்துவிட்டான். அவன் மடிந்தான் என்றே மற்றவர்கள் கருதினார்கள். ஆனால் அவர்கள் அவனைத் தூக்கி வெளியே விட்டபொழுது அவன் 'இன்னும் எத்தனை பேரையோ சுட்டபின்பல்லவா நான் சாகவேண்டும்!' என்று கர்ஜித்தான். அவர்கள் மீண்டும் மலையுச்சியை நோக்கிச் சென்றனர் அம்மலையைத் தாண்டி மறுபக்கத்திற்குப் போய்விட்டால் அவர்களுடைய கவலை ஒழியும். உயரே போகப் போகக் குளிர் அதிகமாயிருந்தது. கோடை நடுவிலேயே இம்மலையில் பனி பெய்யும். அந்த மாரிக்கால இருளிலே இங்கு குளிர் தாங்கமுடியவில்லை. மூன்று மணிநேரம் அவர்கள் மலையில் ஏறிச்சுற்றிய பின்னால் முன்னால் பார்த்த இரண்டு மலை ஆடுகள் நின்ற இடத்திற்கே திரும்பிவந்துவிட்டனர் அதைக் கண்டு மனம் வருந்தினர். இனி அம்மலையைத் தாண்டுவது இயலாது என்று மலைத்தனர். அப்பொழுது ஸீன் ஹோகன் கவிபாடுகிற புலவர்கள் மட்டும் மலைகள் மாண்புடையவை என்றும், அழகின் உறைவிடம் என்றும் வர்ணிக்கிறார்களே! அவர்கள் வீட்டில் இருந்துகொண்டே ஆனந்தமாய்ப் பாடிவிடுகிறார்கள். நம்மைப் போல் பட்டினியும் பசியுமாய்க் குளிரில் வந்து நடந்தால், அவர்கள் ஏழு ஜன்மத்திலும் இயற்கை ஆழகைப் பற்றிப் பாடவே மாட்டார்கள் என்று வேடிக்கையாகப் பேசினான்.

பின்னர் அவர்கள் வேறு வழியில் செல்லவேண்டுமென்று தீர்மானித்தனர். இருப்புப் பாதை வழியாகக் காஹிர் என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டனர். இந்த யோசனை தோன்றியது.அவர்களுடைய நல்லதிர்ஷ்டமே. ஏனென்றால், வீதி வழியாக எந்தப் பக்கம் சென்றிருந்தாலும், அவர்கள் பட்டாளத்தார் கையில் சிக்கியிருப்பார்கள். நாலு பக்கத்தாலும் பட்டாளத்தார் மோட்டார் லாரிகளின் சுற்றிக்கொண்டே யிருந்தனர்.

வழி நடப்பதில் இருப்புப்பாதை வழியாகச் செல்வதைப் போல் கஷ்டமானது வேறில்லை. அதிலும் இரவு, அந்த அந்தகாரத்தின் நடுவே அவர்கள் முன்னும் பின்னும் எச்சரிக்கையுடன் கவனித்துக்கொண்டே சென்றனர். தான்பிரீன் திடீரென்று முன்னால் சிறிதுதுரத்தில் கறுப்பாக ஓர் ஒருவம் நிற்பதைக் கண்டான். உடனே ரிவால்வரைக் கையில் பிடித்துக்கொண்டு, யாரது கைகளை மேலே தூக்கு என்று உத்தரவிட்டான். அந்த ஒருவம் உத்தரவை அசட்டைசெய்து விட்டு, அசைவற்று நின்றது. தான்பிரீன் நீட்டிய ரிவால்வருடன் நெருங்கிச் சென்று பார்த்தான். இந்த நெடிய உருவம் ஒரு ரயில்வே கம்பம்! அதைக் கண்டதும் அவன் அடைந்த வெட்கத்திற்கு அளவேயில்லை. அந்தக் கம்பத்தில், 'உத்தரவில்லாமல் இங்கு பிரவேசிப்பவர்கள் கைதுசெய்யப்படுவார்கள்' என்ற ஓர் அறிக்கை தொங்கிக் கொண்டிருந்தது. கூட இருந்த நண்பர்கள் இருவரும் சிரிப்பை அடக்கமுடியாமல் கொக்கரிப்பதைக் கண்டு, தான்பிரீனும் அவகளுடன் சேர்ந்து சிரிக்கலானான்.

62