பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7
சிப்பாய்களின் சிறந்த உதவி


டாபின் அம்மாளுடைய வீட்டில் இரண்டு நாள் தங்கிவிட்டு, தான்பிரீன் முதலானவர்கள் வேறிரண்டு நண்பர்களுடைய வீடுகளுக்குச் சென்றனர். அங்கிருந்து டுப்பிரிட் என்னும் இடத்திலிருந்த ரியான் என்பவருடைய வீட்டுக்குச் செல்ல நினைத்திருந்தார்கள். அங்கு வரப்போவதாகத் தகவல்களும் சொல்லி விட்டிருந்தார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்கள் அங்கு செல்லாமல், கடைசி நோத்தில் மிக்செல்ஸ் நகரத்திற்குப் புறப்பட்டுவிட்டனர். அவர்கள் ரியான் வீட்டுக்குச் செல்வதற்காகத் தீர்மானித்திருந்த நேரத்தில், அங்கு எட்டுப் போலிஸார் அந்த வீட்டைச் சூழ்ந்து ரியானையும் கைது செய்துகொண்டு போயினார்.

மிக்செல்ஸ் நகருக்குப் போகும் பொழுது அவர்கள் இடையில் ஒபிரியன் என்பருடைய வீட்டில் விருந்தினராக இருந்தனர். அவர்கள் மேல் மாடியிலே படுத்திருந்தனர். அப்பொழுது திடீரேன்று பல பீலர்கள் (ஐரிஷ் போலிஸார்) கீழே வீட்டுக்குள் நுழைந்து உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர். தொண்டர்கள் சண்டை நெருங்கி விட்டது என்று எண்ணித் துப்பாக்கிகளைக் கையிலெடுத்துக் கொண்டனர். மாடிப்படிகளிலே பீலர்கள் காலெடுத்து வைக்கவேண்டியதுதான் தாமதம், அவர்களை எமலோகத்திற்கு அனுப்பிவிடவேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தனர். ஆனால், பீலர்கள் மாடிப் படிகளில் ஏறவுமில்லை, எமலோகத்திற்குப் போகத் தயாராகவும் இல்லை. பின்னால் விசாரித்ததில், நாய்களின் அனுமதிச்சீட்டுக்கு (லைசன்ஸுக்கு)ப் பணம் செலுத்துவது பற்றி விசாரிக்கத் தான் அவர்கள் வந்ததாகத் தெரிந்தது!

65