பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


பிறகு தொண்டர்கள் மிச்செல்ஸ், கிழக்கு லிமெரிக் நகர்களைத் தாண்டி லாகெல்லி நகரையடைந்தனர். அங்கு ஒருவாரம் தங்கியிருந்தனர்.

அங்கே அவர்கள் இருந்த நிலைமையைக் கண்டால், கல்லும் கசிந்துருகும். அவர்களை ஒத்த பிற வாலிபர்கள், தங்கள் அறிவையும் ஆற்றலையும் விற்று, அந்நிய அரசாங்கத்தின் கீழே வேலைபார்த்தும், வேறுபல தொழில்கள் செய்தும் ஏராளமாகச்சம்பாதித்துப் பெற்றோர், பெண்சாதி, பிள்ளை குட்டிகளுடன் இன்ப வாழ்க்கை நடத்துகையில் அவர்கள், துப்பாக்கியும் தேச பக்தியுமே துணையாய்க் கொண்டு, காடும் மலையுமாக அலைந்து கொண்டிருந்தனர். உணவுக்கும், உடைக்கும், உட்காரும் இடத்திற்கும் அவர்கள் பிறர் கையை எதிர்பார்க்க வேண்டியிருந்தது. கையில் ஒருசதமேனும் காசு இல்லை. சொந்த நாட்டில் பகலில் வெளியே தலைநீட்ட வழியில்லை. திருடர்களைப் போல் நள்ளிரவில் நடக்கவேண்டியிருந்தது. இரண்டு இரவுகளை ஒரே ஊரில் கழிக்க வழியில்லை. குட்டிப்போட்ட பூனைப்போல், ஊரூராய்த் திரியும்படி நேர்ந்தது. இதைப்பார்க்கிலும் இன்னும் எத்தனைகஷ்டங்களையும் அவர்கள் தாய்த்திரு நாட்டிற்காக ஏற்றுக் கொள்ளத் தயாராயிருந்தனர். ஆயினும் ஒரு விஷயத்தை மட்டும் அவர்கள் நெஞ்சு பொறுக்கவில்லை. நாட்டில் அவர்களை ஆதரிப்பவர் எவருமில்லை. அவர்களைப் பற்றி மலைமலையான கண்டனங்கள் குவிந்தனவேயன்றி, அணுவளவு ஆதரவுமில்லை. ஸின்பீனர்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. அவர்களுடைய பழைய நண்பர்களில் பலரும் அவர்களைக் கைவிட்டுவிட்டனர். அவர்களைக் கண்டவுடன் நண்பர்கள் நடுங்கி விலகினார்கள். எனினும் ஒரு விஷயத்தை மட்டும் தொண்டர்கள் மறக்காது ஆறுதலடைந்து வந்தனர். காலம்மாறும்; இன்று நாம் செய்ததைக் கண்டிப்பவர்கள் நாளை உண்மையை அறிந்து நம்மைப் போற்றிப் பின்பற்றுவார்கள். 1863இல் கலகம் செய்தவர்களையும், 1867இல் புரட்சி செய்தவர்களையும், 1916இல் சுதந்திரப்போர் தொடுத்தவர்களையும் அக்காலத்து மக்கள் கண்டித்தார்கள்; பின்னால் அவர்களே ஆதரித்தார்கள். குடியரசை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் உறுதி கொண்டுள்ளார்கள். ஆனால் அதற்காக வேண்டிய காரியத்தை ஆரம்பித்தால் கண்டிக்கிறார்கள். பின்னால் எல்லோரும் நம்முடன் சேருவார்கள். அப்பொழுது நமது கொள்கை வெல்லக் காண்போம் என்ற நம்பிக்கைதான் அவர்களுக்கு உற்ற துணையாயிருந்தது.

சில இடங்களிலே அவர்களுக்கு ஓர் இரவு தங்ககுவதற்குக் கூட இடம் கிடைக்கவில்லை. மிகக் குளிரான இரவுகளில், யார் வந்து ஒதுங்கினாலும் இடம் கொடுக்கக்கூடியவர்கள், அவர்களைத் தாட்சண்யமின்றி வெளியேற்றி விட்டனர். ஒரு சமயம் அவர்கள் ஒரு குடியானவன் வீட்டில் தங்கியிருந்தார்கள். வெளியே யாரோ கதவைத்தட்டும் ஓசை கேட்டது. குடியானவன், யாரது? என்று கேட்டான். போலிஸ் என்று பதில் வந்தது. அவ்வார்த்தையைக் கேட்டவுடன் உள்ளேயிருந்த திருக் கூட்டத்தார் எழுந்து துப்பாக்கிகளைத் துக்கிக்

66