பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8
தாயின் தரிசனம்


லிமெரிக் நகரில் தேசியப் பற்றுள்ள பாதிரியார் ஒருவர் இருந்தார். புரட்சிக்காரர்களிடம் அவருக்குப் பிரியம் அதிகம். பொதுநல ஊழியம் செய்யும் எவருக்கும் அவர் தோழர். அவரைக் காணவே தான்பிரீன் முதலானவர்கள் காரில் பிரயாணம் செய்து வந்தனர். லிமெரிக் வந்ததும் அவர்கள் நேராகப் பாதிரியாருடைய வீட்டுக்குச் சென்றனர்.

பாதிரியார் அவர்களைக் கண்டதும் அளவற்ற ஆனந்தங்கொண்டார். அவருக்குக் கடுகளவு பயமுமில்லை. அவருடைய வீட்டில் வேலைபார்த்து வந்த மோல்லி என்னும் மாது புதிய வாலிப விருந்தினர்களிடம் விசேஷ அன்பும் மரியாதையும் காட்டினாள். அவர்களுக்குப் பசித்தபோது நல்ல உண்டிகளும், பானங்களும் தயாரித்துக் கொடுத்தாள். சில சமயங்களில் சுவையுள்ள பண்டங்களைச் செய்து, அவற்றை உண்டு தீர வேண்டும் என்று மோல்லி கண்டிப்பான உத்தரவும் போடுவதுண்டு. அங்கிருந்த பொழுது தான்பிரீனும் ஹோகனும் இரண்டு நாள் இரவும் பகலும் படுத்த படுக்கைவிட்டு எழுந்திராமல் ஓய்வெடுத்துக் கொண்டனர். மோல்லி அடிக்கடி அங்கு வைக்கப்பட்டிருந்த சிலுவையின் பக்கம் சென்று, அவர்கள் நீடுழி வாழவேண்டும் என்று பிரார்த்தித்து வந்தாள். சிலுவையின் முன்னால் அணையா விளக்கு ஒன்று போட்டாள். ஜப மாலையைக் கையில் பிடித்து, அவர்களைப் பகைவர்களிடமிருந்து இறைவன் காக்க வேண்டுமென்று பிரார்த்தித்தாள். அவள் அவர்களிடமிருந்து வந்து 'இனி கவலையை ஒழியுங்கள் உண்மையான தர்மவான்களைத் தெய்வம் காட்டிக் கொடுக்காது' என்று ஆறுதல் சொல்வது வழக்கம்.

71