பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1Ο
ரயில் நிலையத்தில் ரகளை

தான்பிரீன் கூட்டத்தார் காலை 2.30 மணிக்கே எமிலியை அடைந்தனர். முதல் ரயில் மதியத்தில்தான் வரும் என்று தெரிந்து கொண்டு அவர்கள் திப்பெரரியிலிருந்து உதவியாட்கள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். திப்பெரரி வீதியில் வழிமேல் விழிவைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தனர். ஒருவரும் வரக்காணோம். வழியில் என்ன நேர்ந்ததோ என்று கவலையுற்றனர். மணி பதினொன்று அடித்தது. ஒவ்வொரு நிமிஷமும் ஒரு நாளாகத் தோன்றிற்று. எந்த ஆசாமியும் வரக்கானோம். ரயில் வரக்கூடிய நேரம் நெருங்கி விட்டது.

உதவிக்கு நண்பர்கள் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? ஸீன் ஹோகன் பகைவர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அவனுடைய நண்பன் சும்மா இருப்பதா? அது நட்புக்குத்துரோகம் அல்லவா? இவ்வாறெல்லாம் தான்பிரீன் எண்ணமிட்டான். எப்படியாவது முயற்சி செய்து பார்த்துவிட வேண்டியது தங்கள் கடமை என்று தீர்மானித்தான். ஹோகனுக்குப் பாதுகாப்பாகச் சுமார் நான்கு முதல் எட்டுப் போலிஸார் தக்க ஆயுதங்களுடன் வரக்கூடும். ஆனால் அவைகளையெல்லாம் பற்றி யோசிக்க அந்தத் தொண்டர்களுக்கு மனமில்லை. ஹோகனை மீட்க வேண்டும் அல்லது அவனுக்காகத் தங்கள் உயிரைப்பலியிட வேண்டும் வருவது வரட்டும் என்று அவர்கள் துணிந்து நின்றனர். சரியாகப் பன்னிரண்டு மணிக்கு ரயில் வந்து விட்டது. உடனே மூவரும் ஸ்டேஷனுக்குள்ளே பாய்ந்தனர்.

78