பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


உள்ளே பாய்ந்த வேகத்தில் தான்பிரீன் ஒரு கிழவியை இடித்துத் தள்ளிவிட்டான்; தானும் கீழே விழுந்தான். கிழவியைத் திரும்பிப் பாராமலே துள்ளி எழுந்து ரயிலடிக்கு ஓடினான். ஒவ்வொரு நிமிஷமும் அவனுடைய கைவிரல் சட்டைக்குள் மறைத்திருந்த ரிவால்வரின் குதிரையைப் பிடித்த வண்ணம் தயாராக இருந்தது.

ரயில் வந்ததே யொழிய அதில் ஒரு கைதியையும் காணோம்! மூவரும் ஏமாற்றமடைந்து திகைத்தனர். ஆனால் அதுவும் நல்லது தான் என்று கொஞ்சம் சந்தோஷம் அடைந்தனர். ஏனெனில் ஹோகன் அடுத்த ரயிலில் கொண்டு வரப்பட்டால், அதற்குள் திப்பெரரி ஆட்கள் வந்துவிடக்கூடும் என்று அவர்கள் நம்பினார்கள். அடுத்த ரயில் வரும்வரை காத்திருப்பதுதான் மிகவும் கஷ்டமாயிருந்தது. போராட்டத்தில் தீவிரமாய்க் குதிப்பது எளிது. ஆனால் எதையும் எதிர்பார்த்துக் காத்திருப்பதுதான் கஷ்டம்.

திப்பெரரி நண்பர்கள் ஆபத்துக்கு உதவத் தவறி விட்டனர். தான்பிரீன் வேறு எங்கிருந்து உதவி பெறலாமெனச் சிந்தித்தான். பக்கத்து மாவட்டங்களிலிருந்த கால்ட்டீ தொண்டர் படைக்குத் தகவல் கொடுத்தால் பல வீரமுள்ள வாலிபர்கள் உடனே உதவி செய்வார்கள் என்று கருதினான். அவ்வண்ணமே அவர்களுக்குச் செய்தி அனுப்பி உதவிக்கு வரும்படி வேண்டினான். கால்ட்டீ வீரர்கள் தகவல் கிடைத்த மறுநிமிஷமே ஐந்து பேர்களை அனுப்பி வைத்தனர்.

கால்ட்டீ தொண்டர்களுடைய பெயர்களாவன: ஈமன் ஓப்ரியன். ஜேம்ஸ் கான்லன், ஜே. ஜே. ஓப்ரியன், ஸீன் லிஞ்ச், மார்ட்டின் போலீ. அந்த வாலிபர்கள் அன்றைய தினம் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காரணத்தால் அவர்களில் மார்ட்டின் போலீ என்பவன் பின்னால் போலிஸாரால் பிடிக்கப்பட்டு, இரண்டு வருஷங்கள் கழித்து மவுண்ட் ஜாய் சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவன் மட்டுமல்ல, அந்தப் போராட்டத்தில் எவ்வித சம்பந்தமும் இல்லாத மாஹெர் என்னும் வாலிபனும் குற்றஞ் செய்ததாகப் பொய்க்காரணம் சொல்லி தூக்கிலிடப்பட்டு மடிய நேர்ந்தது. அந்த இரு வாலிபரும் அயர்லாந்துக்காகச் சிரித்த முகத்துடன் உயிரைப் பலி கொடுத்தனர்.

கால்ட்டீ துணைவர்களைச் சேர்த்து தான்பிரீன் படையில் மொத்தம் எட்டுப் பேர்கள் இருந்தனர். ஐந்து பேர்களுக்கு ஆயுதங்கள் இருந்தன; மூவர் நிராயுத பாணிகள். எல்லோரும் கூடிஆலோசித்ததில் முன்போட்டதிட்டம் சிறிது மாற்றப்பட்டது. ஸீன்டிரீஸியும், ஸிமஸ் ராபின்ஸனும், தான்பிரீனும், அடுத்த ஸ்டேஷனுன நாக்லாங்குக்கு சைக்கிள்களிற் சென்றனர். நாக்லாங் எமிலியிலிருந்து மூன்றாவது மைலில் இருந்தது. மற்ற ஸ்டேஷன்களில் எப்பொழுதும் போலிஸாரும் பட்டாளத்தாரும் தங்கியிருப்பார்கள் என்பதால் நாக்லாங் ஸ்டேஷனுக்கே செல்ல வேண்டும் என்று அவர்கள் புறப்பட்டார்கள். அதன் பக்கத்தில் இரண்டு மைல்களுக்கு இடையில் போலிஸ் நிலையமே கிடையாது. நாக்லாங்

79