தான்பிரீன் : தொடரும் பயணம்
கான்ஸ்டபிளின் கை பதறாமலிருந்திருந்தால் தான்பிரீனை ஒரு கணத்தில் சுட்டுக் கொன்றிருக்க முடியும். தான்பிரீன் விரைவாக ரிவால்வரை அவன் நெஞ்சுக்கு நேராகப் பிடித்தான். தனக்கு சாவுமணி அடித்து விட்டதென்று அஞ்சி அவன் அவ்விடத்திலிருந்து குதிரைபோல் துள்ளி ஓடிவிட்டான். சார்ஜெண்டுக்கு பலமான காயங்கள் ஏற்பட்டன. அவனும் தரைமேல் வீழ்ந்தான். தான்பிரீன் ரெய்லியை விடாது சுடவேண்டுமென்று பார்த்தான். ஆனால் அவனுடைய கண்களில் இரத்தம் வழிந்து பார்வை தெரியாமல் போய்விட்டது. இதற்குள் நண்பர்கள் ஹோகனை ஸ்டேஷனுக்கு வெளியே செளகரியமான ஓரிடத்திலே கொண்டு சேர்த்தனர்.
இறந்த கான்ஸ்டபிளையும் இறந்து கொண்டிருந்த சார்ஜென்டையும் தவிர அங்கு வேறு எதிரிகள் இல்லை. ஆதலால் தான்பிரீன் விரைவாகச் சென்று ஸ்டேஷன் வாயிலை அடைந்தான். மக்கள் திகைப்படைந்து ரயிலிலிருந்து கீழே குதித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். எஞ்சின் ஓட்டிக்குக் கூட சண்டை நடந்தது தெரியாது. எங்கோ குண்டோசை கேட்பதாக அவன் எண்னிக் கொண்டான்.
அன்றிரவு இறந்து போன என்ரைட்டின் உடலும், காயம்பட்ட சார்ஜென்டும் ரயிலில் கில்மல்லக் என்ற ஊருக்குக் கொண்டு போகப்பட்டதில் சார்ஜென்டும் மறுநாள் மாலை இறந்துபோனான். பின்னால் மரண விசாரணையில் ரெய்லி வாக்குமூலம் கொடுத்தான். அவன் வாக்கு மூலத்தை ஒருவரும் நம்பவில்லை. இந்த மரண விசாரணையின் முக்கிய அம்சம் என்னவெனில், ஜூரர்கள் கொலை என்று தீர்ப்புக்கூற மறுத்துவிட்டதேயாகும். கெளரவமான மனிதர்களை அரசாங்கம் கைது செய்ததும், மக்களுக்கு ஆத்திரமூட்டியதும், தக்க பந்தோபஸ்தில்லாமல் போலிஸாரை அனுப்பி வைத்ததும் குற்றமென்று அவர்கள் கூறினார்கள் அத்துடன் புரட்சிக்காரர்களுக்கு இறந்து போன போலிஸாரிடம் பகைமை இல்லை என்பதையும், போலிஸார் தங்கள் கடைமையை மறந்து துப்பறிந்து கூறும் உளவாளிகளாக நடந்தும், பட்டாளத்தில் வேலைகளைத் தாங்களே செய்தும் வந்ததால் இம்மாதிரிச்சண்டைகள் நடந்தன என்பதையும் அவர்கள் எடுத்துக் காட்டினார்கள்!
நாக்லாங் சம்பவத்தைப் பற்றிப் பலர் பலவாறு கூறி வந்தனர். பாதிரிமார்களும், பத்திரிகைக்காரர்களும் வழக்கம்போல் அதைக் கண்டித்து ஓலமிட்டனர். ஆனால் இதே ஆசாமிகள்தான் பின்னால் 'வீரர்கள் வாங்கித் தந்த சுயராஜ்யம்' என்று அவர்களைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள்.
83