பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


1919 ஆம் வருடக் கடைசியில் நிலைமை மாறிவிட்டது. முதன்மையான இரகசியப் போலிஸார் நடுத்தெருக்களில் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். சுட்ட தொண்டர்கள் பகைவர்களிடம் சிக்காமல் தப்பிவந்தனர். பிற்காலத்தில் இரகசியப் போலிஸ் வர்க்கத்தையே அழித்து விடவேண்டும் என்று தொண்டர்கள் உறுதி செய்தபின் அவ்வர்க்கத்தார் தங்கள் வீடுகளில் வசிக்கமுடியவில்லை. தெருக்களில் நடமாடவும் முடியவில்லை. கடைசியாக அவர்கள் அனைவரும் 'டப்ளின்மாளிகை' க்குள்ளேயே பதுங்கிக்கிடக்க நேர்ந்தது. அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதனால் ஆயுதந்தாங்கிய பட்டாளத்தாருடன் வருவதே வழக்கம். அவர்களில் பலர் வேலையை ராஜினாமா செய்தனர்; மற்றும் சிலர் புரட்சிக்காரர்களுடைய தொந்தரவுக்குத் தப்பி வாழமுடிந்தது; ஏனென்றால் அவர்கள் புரட்சிக்காரருடைய வழிக்கு வருவதில்லை என்று அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தனர். பின்னால் பல இரகசியப் போலீஸார் புரட்சிக்காரருடைய இரகசிய இலாகாவில் சேர்ந்து கொண்டு, தங்களுக்குக் கிடைத்த அரசாங்க ஆவணங்களையும் தகவல்களையும் கொடுத்துப் பேருதவி செய்துவந்தனர்.

திப்பெரரியிலிருந்து வந்திருந்த தான்பிரீன் முதலான நால்வரும் டப்ளின் நகரில் நிலையாக இருப்பதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு நகரிலுள்ள சந்துக்கள், பொந்துக்கள் உட்பட எல்லாப் பகுதிகளும் நன்றாய்த் தெரிந்திருந்தன. எவ்விதமான மாறுவேஷமும் அணியாமல், நினைத்த இடமெல்லாம் சுற்றித் திரிந்தனர். டப்ளின் பெரிய நகராதலால், அவர்கள் சுயேச்சையாகத் திரியவும், நண்பர்களைச் சந்தித்து மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றிக் கலந்து கொள்ளவும் வசதியாயிருந்தது. இரகசியப் போலிஸாரின் தொந்தரவைச் சகிக்கமுடியாமல் தான்பிரீன் கூட்டத்தார் ஒற்றர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்று தீர்மானித்தனர். அவர்கள் சில ஒற்றர்களைச் சுட்டுத்தள்ளினார்கள்; மற்றும் சிலரைத் தாக்கித்துரத்தினார்கள். தங்களைத் தொடர்ந்து வந்தால், என்ன வெகுமதி கிடைக்கும் என்பதை அவர்கள் செய்கையில் காட்டினார்கள். பிறகு ஒற்றர்களுடைய இடையூறு குறைய ஆரம்பித்தது. திப்பெரரியிலிருந்து சில ஒற்றர்கள் டப்ளினுக்கு வரவழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள்தான் ஸோலொஹெட்பக் ஆசாமிகளை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்க முடியும் என்பது அரசின் எண்ணம். அந்த ஒற்றர்கள் வந்த சில நாட்களுக்குள் பாடங்கற்றுவிட்டனர். அவர்கள் தான்பிரீன் கூட்டத்தாரைப் பின்பற்றிச் செல்வது தங்கள் உடம்புக்கு நல்லதில்லை என்று கண்டு கொண்டனர். குளிர்காய்வதற்கு, நெருப்போடு ஒட்டியிராமலும் வெகுதுரம் விலகிவிடாமலும் இருப்பது போல, அவர்கள் தொண்டர்களிடம் நடந்து கொண்டனர். சில சமயங்களில் அவர்கள் தொண்டர்களை வெகு சமீபத்தில் கண்டு விட்டாலும், காணாதது போல் வெகு விரைவாகச் சென்று விடுவார்கள்.

95