பக்கம்:தாய்லாந்து.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.2

அயோத்தி என்று பெயர்தானே தவிர, அங்கே ராமருக்குக் கோயில் இல்லை. ராமரின் நினைவாக வைத்த பெயர்தானாம்!

ஊரிலும்,ஊருக்கு வெளியிலும் புத்தர் கோயில்கள் ஏராளமாக உள்ளன. நாங்கள் ‘வாட்ஃப்ரா’ கோயிலுக்குப் போயிருந்தோம். மிகப் பெரிய ஆலயம். எல்.ஐ.ஸி. கட்டிடத்தைப் படுக்க வைத்தால் அது எவ்வளவு நீளம் இருக்குமோ அவ்வளவு தூரத்துக்கு புத்தர் கால் நீட்டிப் படுத்திருக்கிறார். ஒரு பிரதட்சணம் வந்தால் நம் கால்கள் வலிக்கின்றன. ஒரு சைக்கிள் இருந்தால் சுலபமாகச் சுற்றிப் பார்த்து விடலாம். புத்தர் நீளமாக ஒரு கோடிக்கு இன்னொரு கோடி படுத்திருப்பதால் ‘தோள் கண்டார் கால் காணார்! கால் கண்டார் தோள் காணார்!’ என்று சொல்லலாம். கோயிலுக்குப் பக்கத்திலேயே திறந்த வெளியிலும் ஒரு புத்தர் படுத்திருக்கிறார். அந்த புத்தரைப் பார்த்த போது எனக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் நினைவுக்கு வந்தார். ரங்கநாதரைப் பார்த்து இவர் படுத்துக் கொண்டாரா, அல்லது இவரைப் பார்த்து ரங்கநாதர் படுத்துக் கொண்டாரா தெரியவில்லை!

“அழகான சோலைகள் நிறைந்த இயற்கைச் சூழ்நிலையைக் கண்டால் யாருக்குத்தான் இளைப்பாறத் தோன்றாது? அயோத்தியும் ஸ்ரீரங்கமும் அத்தகைய இடங்களாயிற்றே! அதனால் ‘ஹாய்'யாகப் படுத்துவிட்டிருப்பார்கள்” என்றார் ஸ்ரீவே.

“இந்த புத்த விஹார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது” என்றார் ஹுமாயூன்.

“இல்லை; அறுநூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு” என திருத்தினேன் நான். முகத்தில் கேள்விக் குறியுடன் அவர் என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார்.

11
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/10&oldid=1075181" இருந்து மீள்விக்கப்பட்டது