பக்கம்:தாய்லாந்து.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“நான் மூன்று வருடங்களுக்கு முன் இங்கே வந்திருந்த போதும் அறுநூறு வருடம் என்று சொன்னீர்கள். இப்போதும் அறுநூறு என்கிறீர்களே மூன்றைக் கூட்டிச் சொல்லியிருக்க வேண்டாமா?” என்று கேட்டேன்.

யோத்தியை விட்டுப் புறப்படுமுன், “எங்காவது நதிக் கரையில் வேனை நிறுத்திச் சாப்பிடலாமா?” என்று கேட்டார் ஹுமாயூன். எங்கே பார்த்தாலும் தென்னையும், வாழையுமாகத் தஞ்சாவூர், ஸ்ரீரங்கம் மாதிரியே ‘குளுகுளு’ தோற்றம். படித்துறை ஒன்றைத் தேடிப் பிடித்தோம். கரையில் மிக உயரமான நாலுகால் மண்டபம். அங்கே வசதியாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு மரப்பலகைகள்.

நதியைக் கண்டதும், ஸ்ரீவேணுகோபாலன் சின்னக் குழந்தைபோல் ஓடிப் போய் படித்துறையில் இறங்கித் தண்ணீரைக் கால்களால் அளைந்து கொண்டிருந்தார். நாங்கள் ஏழெட்டு பேர் வயிறு முட்டச் சாப்பிட்டது போக மிஞ்சியதை, அங்கே வாலைக் குழைத்து நின்ற நாய்கள் பலத்த சண்டை சச்சரவோடு பங்கு போட்டுக் கொண்டன. “காகங்கள் ஒன்று கூடி ஒற்றுமையாகச் சாப்பிடும். நாய்கள் சண்டையிட்டுக் கொள்ளும்; நாமெல்லாம் காகங்கள் மாதிரி” என்றார் ஸ்ரீவே.

“அடாடா எவ்வளவு அமைதி! இப்படி ஓர் இடம் கிடைத்தது நம் அதிர்ஷ்டம்தான்” என்றேன்.

“இது ஒரு மயானம் ஸார் இது சாதாரண அமைதி அல்ல. மயான அமைதி என்று சொல்லுங்கள். இந்த ஊர்க்காரர்கள் கடைசியாக வந்து சேரும் இடம்!” என்றார் ஹுமாயூன்.

சாவோ ப்ரியா எனும் நதியின் அகல நீளம் அதிகம். பாங்காக்கின் மையப் பகுதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. பெரிய பெரிய கப்பல்கள் இந்த ஆற்றில் நிற்கின்றன. நாங்கள் ஒரு படகு பிடித்து அந்த நதியில் சங்கமிக்கும் கிளைக்கால்வாய் ஒன்றில் பயணம் செய்தோம். அந்த இடத்தை மிதக்கும் கடைத் தெரு (Floating Market) என்று சொல்கிறார்கள்.

வாய்க்காலின் இரு புறங்களிலும் தேக்குமரத்தினாலான வீடுகள். படகில் போகும் போது அந்த வீடுகளின் பின்புறத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் தோட்டப்-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/11&oldid=1075182" இருந்து மீள்விக்கப்பட்டது