பக்கம்:தாய்லாந்து.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'மிதக்கும் கடைத்தெரு'வில் ஒன்றிரண்டு கடைகளே மிதந்து கொண்டிருந்தன. மற்றக் கடைகள் எல்லாம் கரை ஓரங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. சின்னச் சின்னப் பொருட்களானாலும் கொள்ளை விலை. நம் ஊர் நரிக்குறவர்கள் விற்கும் பாசிமணி மாலைகள் இங்கே அமெரிக்க டாலர்களைக் குவித்துக் கொண்டிருக்கின்றன.

வடக்கே ‘சாங்மாய்’ மலைச்சரிவுகளில் வாழும் ஆதிவாசிகளைப் பார்க்க முடியாத டூரிஸ்ட்களுக்காக இங்கே கரையோரங்களில் அழகழகான ஆதிவாசிப் பெண்களைக் கொண்டு வந்து வரிசையாக நிறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் அசல் ஆதிவாசிகளா, அல்லது அவர்களைப் போல் ‘மேக்அப்’ செய்து கொண்டவர்களா தெரியவில்லை. டூரிஸ்டுகள் அந்தப் பெண்களின் தோள் மீது கைபோட்டு நின்று படம் எடுத்துக் கொள்கிறார்கள். போட்டோகிராபர் ஸ்மைல் ப்ளிஸ் சொல்லத் தேவையில்லை. எப்போதும் சிரித்த முகம்!

நான் அங்கே இருந்தபோது தாய்லாந்து மன்னர் பூமிபால் அவர்களுக்கு அறுபத்தைந்தாவது பிறந்தநாள் விழா கொண்டாடிக் கொண்டிருந்தனர். புத்தகக் கடை ஒன்றில் எங்களுக்கு சாக்லெட் கொடுத்து, “இன்று ராஜா பிறந்த நாள்” என்று கூறியபோது, நாங்கள் அந்தக்கடைக்காரர், ராஜா இருவரையும் வாழ்த்தினோம்.

பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த தாய்லாந்தில் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இப்போதுதான் நிலைமை சற்றே மாறி வருகிறதாம். ‘ஒரு நாட்டின், வளர்ச்சியை அந்த நாட்டின் பங்கு மார்க்கெட் எதிரொலிக்கும்’ என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால், அரசியல் நிலைமை சீரடைந்து வரும் தாய்லாந்தில் இப்போது பங்குமார்க்கெட் துருப்பிடித்துக் கிடக்கிறதென்றும் அடுத்த ஆண்டு சீர்பட்டு விடும் என்றும் சொல்கிறார்கள்.

ரோஸ் கார்டன் என்பது பாங்காக்கிலிருந்து 32 கிலோ மீட்டர் தூரத்தில் அறுபது ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு தோட்டம். இங்கு தாய்க்கிளிகளுடன் அசல் கிளிகளும் கொஞ்சிக் குலவுகின்றன. தாய்லாந்து கலாசாரத்தின் ஒரு ‘மினி’ தோற்றத்தையே இங்கு ‘கல்ச்சுரல் ஷோ'வில் பல்-

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/13&oldid=1075184" இலிருந்து மீள்விக்கப்பட்டது