பக்கம்:தாய்லாந்து.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 1941 ம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டாம் தேதி அதிகாலை நான்கு மணி. தாய்லாந்து வழியாகப் புகுந்து பர்மாவைக் கைப்பற்ற வேண்டும் என்கிற ஒரு பெரிய திட்டத்துடன் ஜப்பானியப் படைகள் இந்த காஞ்சனபுரிப் பகுதியில் புகுந்து முகாமிட்டன.

தாய்லாந்து ராணுவம் ஜப்பானியரின் ஊடுருவலை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா? ஜப்பானியரை எதிர்த்துப் பெரும் போர் நிகழ்த்தியது. காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து நடந்த இந்தப் போரில் நாற்பது ஜப்பான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் தாய் ராணுவத்திலும் பலர் உயிரிழந்தார்கள் என்றும் கய்டு சொன்னார்.

ஜப்பான் ராணுவத்தின் நோக்கம் பர்மாவைக் கைப்பற்றுவதுதானே தவிர தாய்லாந்தைப் பிடிப்பது அல்ல என்று உறுதியாகத் தெரிந்ததும், சரி, போய்க்கோ என்று ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு ஜப்பானியருக்கு வழிவிட்டது தாய்லாந்து.

சண்டை நடந்து கொண்டிருந்த போதே பர்மாவையும் தாய்லாந்தையும் இணைக்கும் பாதை ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது ஜப்பான். தினமும் மூவாயிரம் டன் தளவாடங்களை சப்ளை செய்யும் அளவுக்கு பாதுகாப்பான ஒரு பாதையை அமைக்க வேண்டும். இதுதான் ஜப்பானின் திட்டம். கடல் மார்க்கமாகப் போனால் நேச நாடுகளின் சப்மரின்கள் சும்மா விடாது என்பது ஜப்பானுக்குத் தெரிந்திருந்ததால் இந்த ரயில் பாதை திட்டத்தை மேற் கொண்டது அது.

எனவே, தாய்லாந்தில் தொடங்கி மலைக் காடுகள் வழியாக ரயில் பாதை ஒன்றை அமைத்து அந்த வழியாக பர்மாவை இணைத்துவிட வேண்டும் என்ற தங்கள் திட்டத்தை மின்னல் வேகத்தில் செயல்படுத்தத் தொடங்கியது.

பொறிஇயல் நிபுணர்கள் வந்து பார்த்து விட்டு, ‘இந்த ரயில் பாதையை முழுவதுமாக அமைத்து முடிக்கக் குறைந்த பட்சம் ஆறு வருடங்களாவது ஆகும்’ என்று சொல்லி விட்டார்கள்.

ஆனால் ஜப்பானிய ராணுவத்துக்கோ அதுவரை காத்திருக்கப் பொறுமையில்லை. ஆயிரக் கணக்கான போர்க் கைதிகள் தங்களிடம் அடிமைகளாக இருக்கும் போது இந்த வேலையை விரைவிலேயே முடித்து விடலாம் என்று அது கருதியது.

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/17&oldid=1075188" இலிருந்து மீள்விக்கப்பட்டது