பக்கம்:தாய்லாந்து.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


“எப்படியோ, நமக்கு ஒரு முழுநாள் அரண்மனை வாசம் கிடைத்ததே, அதற்காகச் சந்தோஷப்படுங்கள்!“ என்றேன் நான்.

பாங்காக்கின் பிரதான வீதிகள் எல்லாம் ராமா ஒன், ராமா டூ, ராமா த்ரீ என்று மன்னர்களின் பெயர்களைத் தாங்கியே அமைந்திருக்கின்றன. சின்னச் சின்னத் தெருக்கள் ஆங்காங்கே இந்த முக்கிய வீதிகளோடு சங்கமிக்கின்றன.

“மக்கள் அனைவரும் மன்னருள் அடக்கம் என்பதைச் சிம்பாலிக்காகக் காட்டியிருக்கிறார்களோ, என்னவோ!“ என்றேன்.

“இல்லை, மகாராஜாதான் மக்களைத் தம்மோடு அப்படி அணைத்துக் கொண்டு செல்கிறார். நடுநாயகமாகச் செல்வது ராஜவீதி. அதோடு ஒட்டியுள்ள சின்னஞ்சிறு வீதிகளெல்லாம் மக்கள்!” என்று விளக்கம் தந்தார் உடன் வந்த நண்பர்.

“பழைய மன்னர்களுக்கும் இப்போதைய ஒன்பதாவது மன்னரான பூமிபால் மகாராஜாவுக்கும் என்ன வித்தியாசம்?”

“பழைய மன்னர்களிடம் முழு அதிகாரமும் இருந்தது. இப்போது அப்படி இல்லை. இதை ‘கான்ஸ்ட்டிட்யூஷனல் மானார்க்கி’ என்கிறார்கள். அதாவது அரசியல் சட்டத்துக்குட்பட்ட அரச பரிபாலனம்” என்று விளக்கம் தந்தார் கய்டு.

தாய்லாந்து அரசியலுக்கு இரண்டு முகங்கள் உண்டு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் ஒரு முகம். அதன் சிபாரிசின் பேரில் மன்னர் நியமிக்கும் செனட் எனப்படும் ஆட்சிக்குழு இன்னொரு முகம்.

ஆக ஜனநாயகமும் மன்னராட்சியும் கைகோத்து இயங்கும் ஓர் அற்புதக்கலவைதான் தாய்லாந்தின் இப்போதைய ஆட்சி முறை. தேர்தல், எம்.பி. என்பது பற்றியெல்லாம் மக்கள் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை. அவர்களுக்கு மன்னர்தான் எல்லாமே. அவர் பேச்சுக்கு மறு பேச்சில்லை. மன்னர் வருகிறார் என்றால் மிக்க மரியாதயோடு நடுரோடில் மண்டியிட்டு வணங்குவதை மனப்பூர்வமாய் மகிழ்ச்சியோடு செய்கிறார்கள். அரசர் தம்பதியரின் படம் இல்லாத வீடுகளோ, கடைகளோ, தொழிற்சாலைகளோ, அரசு அலுவலகங்களோ, பொது மண்டபங்களோ கிடையாது. முதலில் அரசர் படத்தைக் கொண்டு வந்து வைத்துவிட்டு அப்புறம்தான் கட்டட வேலையே தொடங்குகிறார்கள்!

34
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/33&oldid=1075203" இருந்து மீள்விக்கப்பட்டது