பக்கம்:தாய்லாந்து.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 ஸில்க்கில் மலர்கள், பர்ஸ், போட்டோஃப்ரேம், பூக்கூடை காலணி, கைப்பை, என்று என்னென்னவோ கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் வீடுகள்.

இவர்கள் உழைக்கும் அளவுக்குப் பணம் சம்பாதிக்க முடிவதில்லையாம். எனவே இங்குள்ள விவசாயிகள், நெசவுத் தொழில் செய்யும் குடும்பங்களுக்குக் கடன் சுமை அதிகமாகி தங்கள் வீட்டு இளம் பெண்களை பாங்காக் போன்ற பெரிய நகரங்களுக்கு அனுப்பிவிடுகிறார்களாம். அப்படிப் போகும் இந்தப் பெண்கள் சில காலம் பாங்காக்கில் தங்கிப் பணம் சம்பாதித்துக் கொண்டு வந்து கடனை அடைக்கிறார்களாம்.

“அங்கே அவர்களுக்கு என்ன வேலை?” என்று சொம்பட்டிடம் கேட்டேன்.

“உலகின் மிகப் பழமையான தொழில்தான்” என்று கண் சிமிட்டிய சொம்பட் கொஞ்சம்கூடக் கூச்சமின்றி அது என்ன தொழில் என்பது பற்றி யதார்த்தமாகச் சொன்னார்.

அதை ஜீரணித்துக் கொண்டு அடுத்த கேள்வி கேட்க எனக்குச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

“இவர்கள் இப்படிச் சீரழிந்து போவது வீட்டுக்குத் தெரியுமா?”

“தெரியுமாவது? பெற்றோர்கள்தானே வழியனுப்பி வைக்கிறார்கள்! தாய்லாந்தில் செக்ஸ் என்பது ஒரு பாவத் தொழில் அல்ல” என்றார் சொம்பட்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/49&oldid=1075213" இலிருந்து மீள்விக்கப்பட்டது