பக்கம்:தாய்லாந்து.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


 “நீங்கள் எதற்காக கிராமத்தை விட்டு சங்மாய்க்கு வந்திருக்கிறீர்கள்?” என்ற பேச்சைத் துவக்கினேன்.

“சும்மாத்தான் வந்திருக்கிறேன். இப்போது இங்கே குடைத் திருவிழா நடக்கிறது. அதையும் பார்த்தாற் போலிருக்கும் என வந்திருக்கிறேன்” என்றார்.

‘குடைத் திருவிழாவா அதென்ன?’ என்பது போல நாங்கள் வியக்க, “அதை நாமும் பார்க்கலாம். முதலில் இவரிடம் பேசி முடியுங்கள்” என்றார் சொம்பட்

உசன் டவுட்டாவின் குடும்பத்தில் எத்தனை பேர்? என்ன தொழில்? நெசவா? விவசாயமா? என்றெல்லாம் கேட்டபின் கடைசியாக “உங்கள் மகள் பாங்காக் போயிருக்கிறாளாமே...?” என்றேன்.

லேசாகத் தலையசைத்து விட்டுச் சற்று நேரம் மெளனம்.

“எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காகத்தான். அங்கே ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கிறாள்” என்றார்.

“ஹோட்டலில் என்ன வேலை?”

“ஹோட்டல் என்றால் ‘எல்லாம்'தான்” என்றார். அந்த ‘எல்லாம்’ என்ற சொல்லில் எல்லாமே அடக்கம்!

“உங்கள் சம்மதத்துடன்தான் அவள் போனாளா?”

“எங்கள் கிராமப் பகுதியில் வறட்சி. நிலமெல்லாம் வெடித்த விட்டது. விளைச்சல் இல்லாத காரணத்தால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை. அதிகாரிகள் மிரட்டலுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. பசி, பட்டினி என்று வாடினோம். நாங்கள் படும் துன்பங்களைப் பார்க்கச் சகிக்காமல்தான் என் மகள் ‘தெற்கே’ போய் சம்பாதிக்கப் போவதாய்ப் பிடிவாதம் பிடித்தாள்.”

“தனியாகவா?”

“இன்னும் சிலபெண்களும் போயிருக்கிறார்களே!”

“அவர்களுக்கு அங்கே யாரையாவது தெரியுமா?”

“தெரியாது. புரோக்கர் அழைத்துப் போயிருக்கிறார்.”

“புரோக்கரா? ஆணா, பெண்ணா?”

“பெண்தான்."

54
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/52&oldid=1075216" இருந்து மீள்விக்கப்பட்டது