பக்கம்:தாய்லாந்து.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


 கலையழகு பொருந்திய மரச் சிற்பங்களைப் பெரும் அளவுக்கு ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனம் சுதாலக் கம்பெனி.

முகம் பார்த்துத் தலைவாரிக் கொள்ளும் அளவுக்கு மரத்தில் அப்படி ஒரு பாலிஷ்!

கைவிரல்களின் மந்திர வித்தைகள்!

பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து கோடீசுவரர்கள் இங்கே வந்து தங்கள் வீட்டுக்கு வேண்டிய மரச்சாமான்களை ஆர்டர் கொடுத்து விட்டுப் போகிறார்கள்.

சங்மாய்க்காரர்கள் மரச் சாமான்களில் மட்டும் தங்கள் கைவண்ணத்தைக் காட்டவில்லை. சங்மாய் முழுவதும் பரவியுள்ள தொழில் கூடங்கள் பலவற்றிலும் கலைவண்ணம் கொட்டிக் கிடக்கிறது.

என் மனமெல்லாம் சற்று நேரம் முன்பாக உசன் டவுட்டா குறிப்பிட்ட குடைத் திருவிழா பற்றியே இருந்தது.

“அடுத்து?...“ என்று நான் இழுத்தேன்.

“குடைத் திருவிழா!” என்று கய்டு கூறியதும் மகிழ்ச்சி தாங்கவில்லை.

திருவிழா என்றால் ஏதோ கோயில் சாமி - ஊர்வலம் என்றெல்லாம் எதிர் பார்க்காதீர்கள். குடைகளுக்குத் தரப்படும் மரியாதைக்கு அவற்றை உருவாக்கும் கை விரல்களின் கலைத் திறமைக்கு ஒரு விழாவாக இதைக் கொண்டாடுகிறார்கள். கண்ணில்படும் இடமெல்லாம் குடைகள்தான்! கடைகளில், பெட்ரோல் பங்குகளில், ஹோட்டல் வாசலில் இப்படி எங்கே பார்த்தாலும் குடைகள்தான்.

“இந்தக் குடைகள் மழை வெயிலுக்குப் பயன்படுமா?”

“சாதாரண குடைகளைப் போல இவற்றை மடக்கவோ, விரிக்கவோ முடியும். துணிக் குடைகள்தான். ஆனால், மழையிலும் வெயிலிலும் இவற்றைக் கொண்டு போய் - அதன் மேல் உள்ள வண்ணங்களையும் ஓவியங்களையும் - பாழாக்க யாருக்கும் மனம் வராது. பெரும்பாலும் வரவேற்பு அறைகளில் அலங்காரப் பொருளாகத்தான் இதை வைத்திருப்பார்கள்” என்றார் சொம்பட்.

“கவர்ச்சி எப்போதும் கவைக்கு உதவாது என்பார்கள். இந்தக் குடையும் அப்படித்தான்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டோம்.

57
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/55&oldid=1075220" இருந்து மீள்விக்கப்பட்டது