பக்கம்:தாய்லாந்து.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டதாகவும், கோயிலை எங்கே கட்டுவது என்ற பிரச்னை எழுந்த போது அந்த எலும்பை ஒரு வெள்ளை யானையின் மீது வைத்து அனுப்பி, அந்த யானை எங்கே போய் நிற்கிறதோ அங்கே கட்டுவது என்றும், அப்படி புத்தரின் எலும்பைச் சுமந்து வந்த யானை இந்த இடத்தில் நின்றதால் இங்கேயே தாய்ஸ் உதேப் கோயில் உருவானதாகவும் ஒரு செய்தியைச் சொன்னார்கள்.

உயரமான இந்தக் கோயிலுக்குப் போவதில் இரண்டு லாபம் உண்டு. ஒன்று, கோயிலைப் பார்ப்பது. இன்னொன்று அந்த உயரமான இடத்திலிருந்து சாங்மாய் நகரை முழுமையாகப் பார்த்து விடுவது.

“அது என்ன அங்கே? பெரிதாக மாட்டு வண்டி ஒன்று நிற்கிறதே! என்று விசாரித்தேன்.

“இந்தக் கோயில் கட்டப்பட்டபோது தொழிலாளர்களைத் தினமும் இந்த மாதிரி வண்டிகளில்தான் மேலே கூட்டி வருவார்கள். பின்னர் இரவு வீடு கொண்டு போய்ச் சேர்ப்பார்கள். கட்டிட வேலைக்கான சாதனங்களும் இந்த வண்டிகளில்தான் வரும். அந்த வண்டிகளில் ஒன்றை மட்டும் நினைவுச் சின்னமாக இங்கே வைத்திருக்கிறோம். கிட்டத்தட்ட அறுநூறு வருடத்திற்கு மேல் ஆகிவிட்ட சரித்திர கால வண்டி இது!” என்று விவரித்தார் சொம்பட்.

ஹால் போன்ற ஓர் அறைக்குள் அந்தக் கோயிலின் வரலாறு கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.

அங்கே பல்வேறு நாட்டு கரன்ஸி நோட்டுகளைக் கண்ணாடிப் பெட்டி ஒன்றில் வைத்திருந்தார்கள்.

டூரிஸ்ட்டுகள் தங்கள் நாட்டு கரன்ஸிகளை அங்கே போட்டு விட்டுப் போவார்களாம். நம் நாட்டு நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் நோட்டுகள் கூட அங்கே இருந்தன. இரண்டு ரூபாய், ஒரு ரூபாய் நோட்டுகளை மட்டும் காணவில்லை. ஒரு ரூபாய் நோட்டு ஒன்றையும் இரண்டு ரூபாய் நோட்டு ஒன்றையும் மட்டும் அந்தப் பெட்டியில் போட்டுக் குறைந்த செலவில் அந்தக் குறையைப் பூர்த்தி செய்து விட்டு வந்தேன் நான்!

உள்ளே போனபின்பு அடுத்த முக்கால் மணி நேரத்துக்கு எங்களை ஆக்ரமித்துக் கொண்ட உணர்வு பிரமிப்புதான்.

ஏராளமான புத்தர் சிலைகள்! நம்மூர் கோவில்களில் அறு-

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/60&oldid=1075227" இலிருந்து மீள்விக்கப்பட்டது