பக்கம்:தாய்லாந்து.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


இளமை உணர்வுகள் ஏதேனும் ஒரு தருணத்தில் தலைதூக்கி அவர்களைச் சலனப்படுத்தாதா? எப்படி அவர்கள் இந்தச் சலனங்களை வெல்கிறார்கள்?’ என்பதே அந்தக் கேள்வி.

பிட்சுவின் குழந்தை முகத்தில் ஒரு சிரிப்பு தவழ்ந்தது!

“அப்படி எந்த ஒரு சூழ்நிலையிலும் மனம் தடுமாறி விடக் கூடாது என்பதால்தான் நாங்கள் எங்கேயும் தனித்துப் போவதில்லை. தடுமாற்றத்துக்குள்ளாக நேரிடும் துறவியை உடன் செல்லும் துறவி எச்சரித்துக் காப்பாற்றுவார்.“

“புத்தமதம் போதிக்கும் முக்கிய உபதேசங்கள் என்ன என்று சொல்ல முடியுமா?”

“கொல்லாமை, பொய் சொல்லாமை, திருடாமை, மது அருந்தாமை, பிறன் மனை நோக்காமை. இந்த ஐந்தும் முக்கியமானவை.“

ந்தக் கோவிலில் நாங்கள் இருந்த இரண்டு மணி நேரமும் உள்ளத்தூய்மையும் உன்னத உணர்வும் பெற்றோம்.

‘என்ன, புறப்படலாமா?’ என்பதற்கு அடையாளமாக சொம்பட் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.

“மலை இறங்கி நெடுந்துரம் பயணம் செய்து ஊர் போய்ச் சேர வேண்டும். நாளை காலை நீங்கள் பாங்காக்கில் இருக்க வேண்டும் அல்லவா?“ என்றார்.

கோயிலிலிருந்து திரும்புகிறவர்களும், கோவிலுக்குள் போகிறவர்களுமாக அந்தப் பகுதியே கலகலப்பாக இருந்தது. சர்வதேச மக்களின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம். பல்வேறு உடைகளில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த டூரிஸ்ட்டுகளுக்கு இடையே அங்கங்கே ஆரஞ்சு வண்ண ஆடையில் பளிச்சிடும் புத்த பிட்சுக்கள்!

கீழே இறங்கியபோது அதுவரை நாங்கள் காணாத காட்சி ஒன்றைக் கண்டோம்.

சுற்றுலாப் பயணிகள் சிலர் தங்கள் கையில் சிறிய கூண்டு ஒன்றை வைத்திருந்தார்கள். சில கம்பி வலையாலும், சில மூங்கில் குச்சிகளாலும் ஆனவை. அந்த கூண்டுகளுக்குள் சிறைப்பட்டிருந்த தாய்லாந்துக் குருவிகள் கீச்சுக் கீச்சென்று மெலிதான குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தன.

66
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/64&oldid=1075254" இருந்து மீள்விக்கப்பட்டது