பக்கம்:தாய்லாந்து.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்லாந்து முழுதும் மொத்தம் 27000 புத்தர் ஆலயங்கள் உள்ளனவாம்!

இந்த ஊசிமுனைக் கூர்மைகள் இளநீர்க்காய்களிலும் பார்க்கலாம். அந்தக் காய்களை வெள்ளை வெளேரென்று ஒரு மினி கோபுரம் போல் சீவித் தருகிறார்கள். அதைப் போலவே நாட்டியப் பெண்கள் தலையிலும், கை விரல்களிலும் கூர்மையான அணிகள்தான்.

வரைபடத்தில் தாய்லாந்தின் அமைப்பைச் சற்று உற்றுக் கவனித்தால் அதுவும் கூராகவே தெரியும். அந்த நாட்டின் அமைப்பே யானையின் துதிக்கை வடிவத்தில் கூர்மையாக முடிகிறது.

புத்திக் கூர்மையிலும் தாய்லாந்து மக்கள் மற்றவர்களுக்கு இளைத்தவர்களல்ல. தாய்லாந்துப் பெண்களை கவியரசு கண்ணதாசன் ‘தாய்க்கிளிகள்’ என்று வர்ணிக்கிறார்.

சிறந்த கலாசாரம், பிரகாசமான சிவப்பு விளக்கு - இந்த இரண்டு முகங்களையும் கொண்டதுதான் தாய்லாந்து. பாங்காக்கில் சிவப்பு விளக்கின் ஒளி கொஞ்சம் அதிகமாகவே வீசுகிறது. என்னுடன் வந்த ராணிமைந்தனையும், புஷ்பா தங்கதுரையையும் அழைத்து, அந்தப் பகுதியை நீங்கள் இருவரும் கவனித்துக் கொள்ளுங்கள். எனக்கு ரொம்ப சின்ன வயசு, ஆகவே அந்தப் பகுதிக்கு நான் லாயக் ‘இல்லை’ என்று கூறி எய்ட்ஸ் பற்றி தாழ்ந்த குரலில் எச்சரித்து அனுப்பினேன்.

யானைத்தலை வடிவத்திலுள்ள அந்த நாட்டை விரிவாகச் சுற்றிப் பார்க்கக் குறைந்தது ஒரு மாத காலமாவது தேவை. ராமாயணத்தையும், இந்துக் கடவுளையும் தாய்லாந்து மக்கள் வழிபடுவது நம்மை வியக்க வைக்கிறது. ராமர் தெரு, சீதா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயர்ப் பலகைகளும், பிரம்மா, விஷ்ணு, சிவன், விநாயகர் கோயில்களும் போகிற இடமெல்லாம் தென்படுகின்றன. ரத்னபுரி, காஞ்சனபுரி என்ற இரண்டு பெரிய ஊர்களுக்கும்போய் வந்தோம். நம்நாட்டில் காஞ்சிபுரம் என்றால் அங்கே காஞ்சனபுரி எங்கே போனாலும் இந்தியாவின் பழமையைப் பார்ப்பது போன்ற பிரமை.

டி.வி.யில் அடிக்கடி ராமாயணம் காட்டுகிறார்கள். நான் தங்கியிருந்த ஓட்டலில் கூட ஒரு நாள் ராமாயணத்தைச்சித்திரக் காட்சியாகப் பார்த்தேன்.

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/7&oldid=1075178" இலிருந்து மீள்விக்கப்பட்டது