பக்கம்:தாய்லாந்து.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


11

மாரியம்மன் ஆலயத்தைப் பார்த்து விட்டுத் திரும்பும் போது நண்பர் சரவணன் சொன்னார்:

“இன்று நீங்கள் இல்யாஸைச் சந்திக்கிறீர்கள். அவர் வீட்டில்தான் உங்களுக்குப் பகல் சாப்பாடு!”

ஹாங்காங்கில் அய்யூப், சிங்கப்பூரில் யாகப், பாரிஸில் ஜமால், பாங்காக்கில் ஹுமாயூன் என்று ஏற்கனவே பல முஸ்லிம் அன்பர்களின் நட்பைப் பெற்றிருக்கிறேன். இப்போது இல்யாஸும் அந்தப் பட்டியலில் சேரப் போகிறார் என்பதை எண்ணியபோது என் மகிழ்ச்சி இரட்டிப்பாயிற்று.

நண்பர் ஹுமாயூன்தான் எங்களை உட்லண்ட்ஸ் இன் ஒட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அது மிக வசதியான ஓட்டல் என்றும், அதன் சொந்தக்காரர் இல்யாஸ் தமிழ் நாட்டைச் சேர்ந்த சிதம்பரத்துக்காரர் என்றும் நாங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரமுகர் என்றும் கூறியிருந்தார். இல்யாஸ் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டதாரி என்றும் தெரிந்து கொண்டேன்.

திரு இல்யாஸ் அவர்களைப் பார்க்க அவர் ஆபீஸுக்குப் பேர்யிருந்தோம். அங்கே, பட்டை தீட்டப் பெறாத பல ரகமான ஆபரணக் கற்கள் குவிந்து கிடந்தன. அவை பளபளக்கவும் இல்லை. வண்ணங்களை வாரி வீசவும் இல்லை, மேக்கப் போடாத ஒரு சினிமா நடிகை போல மிகச் சாதாரணமாகவும் அடக்கமாகவும் இருந்தன.

அவற்றை சைஸ் வாரியாக வெட்டி, எந்திரங்கள் மூலம் பாலிஷ் போட்டுக் கொண்டு வந்து மேஜையில் வைக்கும்போது தான் பளபளப்பாய் டாலடிக்கின்றன.

87
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/85&oldid=1075275" இருந்து மீள்விக்கப்பட்டது